Friday, August 03, 2007

அரசு அங்கீகரித்த குழந்தைப் புறக்கணிப்பு!

அன்பு குழு நண்பர்களே,
 
பெண் குழந்தைகள் கொல்லப் படுவதைத் தடுக்க, 1992ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட "அரசுத் தொட்டில்" திட்டம் வந்த போது, மக்களுடைய அறியாமையையும் கொடூரமான போக்கையும் நினைத்தும், அந்தக் குழந்தைகளின் எதிர்காலம் குறித்தும் பலர் வருந்தியதுண்டு. குறிப்பாக, இந்திய கலாச்சாரத்தின்படியும், பொதுவாக ஆசிய கலாச்சாரத்தின்படியும் ஆண் வாரிசுக்கு இருக்கும் முக்கியத்துவம், பெண் வாரிசுக்கில்லை என்பதால் இத்தகைய கொடுமைகள் நடந்து வந்திருக்கின்றன. இதை நியாயப் படுத்த முடியாது என்றாலும், இதற்கு ஒரு முக்கியக் காரணம் நம் நாட்டின் பொருளாதார நிலைமையும், கெட்டுப் போன வரதட்சணை பழக்கங்களும் தான்.
 
ஆனால் முன்னேறியதாகக் கருதப்படும் அமெரிக்காவில் கூட குழந்தையைப் பெற்றெடுத்து புறக்கணிக்கும் பழக்கம் இருக்கிறது. அதனால் மொத்தம் 47 மாநிலங்களில் குழந்தை பிறந்து 72 மணி நேரத்துக்குள் பெற்றோர் அதை புறக்கணிக்க விரும்பினால் அதற்கென கொடுக்கப்பட்டுள்ள இடங்களில் சட்டப்படி விட்டுச் செல்லலாம். வாழ்க்கைக்கு ஒரு பொருளே இல்லாமல், தோன்றியவாறெல்லாம் வாழ்ந்துவிட்டு, அடையாளச் சின்னங்களை அரசிடம் புறக்கணித்துச் செல்லும் பரிதாபம் உலகெங்கும் இருக்கிறது என்ற கசப்பான உண்மை இதில் தெளிவாகிறது.
 
குழு நண்பர்கள், இந்த கருத்தைப் பற்றியும், மற்றும் அடிக்கடி அனுப்பப்படும் மின் அஞ்சல்களைப் பற்றியும் கருத்துக்கள் அனுப்பப் பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம். இந்த மின் அஞ்சல்களை, வலைப்பூக்களாக (blog) படிக்க விரும்பினால், http://vangathamizhan.blogspot.com என்ற இணையப் பக்கத்திற்கு வருகை தரலாம்.
 
மேலும், இந்த குழுவின் உறுப்பினர் கணக்கை அதிகரிக்க, உங்கள் நண்பர்களை (சீனாவில் வாழ்பவர்களோ, அடிக்கடி வருகை தருபவர்களோ, அல்லது சீனாவாழ் தமிழர்களுடன் தொடர்பு வைத்துக் கொள்ள விரும்பும் இந்தியா மற்றும் பல நாடுகளில் வாழும் தமிழர்களோ) எங்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டுகிறோம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், உங்கள் நண்பரின் மின் அஞ்சல் முகவரியை (email address) எங்களுக்கு அனுப்பி வையுங்கள். மற்றதை நாங்கள் பார்த்துக் கொள்வோம்.
 
அன்புடன்,
வங்கத்தமிழன்

Friday, July 27, 2007

பெண் பெருமை!

அன்பு குழு உறுப்பினர்களே வணக்கம்,
 
சற்றே சுவாரஸ்யமான ஒரு தலைப்பைப் பற்றி எழுதலாமென்று நினைத்தேன், அதுவே கீழ்காணும் அஞ்சலாக உருவெடுத்தது.
 
அது என்னங்க நம்ம எல்லாம் காதுல பூ வச்சவனாப் பாக்குறாங்களா, இல்ல உண்மையிலயே அப்படி பெண்கள் புலியை முறத்தால அடிச்சு விரட்டியிருப்பாங்களா? அந்த காலத்துல புலிகள் அவ்வளவு கேவலமா முறத்தால அடி வாங்கிகிட்டு ஓடுற அளவுக்கா இருந்திருக்கும் என்று ஆசிரியரை மாணவர் கேட்கிறார். நான், சும்மா ஜோக் அடிக்கிறாங்கன்னு நினைக்கிறேன். அதை வேறு பாடத்துல வச்சு படிக்கச் சொல்லுறீங்க, ஐயோ! ஐயோ!! என்று சிரித்து வேறு வைத்தான். ஆசிரியர் மாணவரோடு ஒன்றி பாடம் நடத்துபவராக இருந்ததால் அவன் முதுகு பிழைத்தது.
 
மாமு, அந்த படத்தை பிரம்மாண்டமா செஞ்சிருக்கானுங்கடா. நம்ம தல கொதிச்சுப் போயி கையில சைக்கிள் செயினோட இறங்கி நிக்கிறப்ப காமிரா ஒரு ஆங்கிள் காட்டுறான் பாரு மச்சான், சான்ஸே இல்லடா! அப்படியே ராமாயணத்துல அனுமன் ராவணன் அரசவையில விஸ்வரூபம் எடுத்தாப் போல ஒரு ஃபீல் குடுத்துட்டாண்டா டைரக்டர், என்று சினிமா பார்த்து கெட்டுப் போன நம்மவர்கள் பேசக் கேட்டிருப்போம். ஒரு விஷயத்த மனசுல பதிகிற மாதிரி சொல்ல அசாத்தியமான கற்பனைகள் அந்த காலத்திலிருந்து இன்றைக்கு வரைக்கும் கையாளப்பட்டு தான் வருதுங்க. அப்படி ஒரு கற்பனை தான் இந்த எழுத்துக்கள் என்றாலும், உண்மையில் பெண்கள் என்னென்ன செய்ய வல்லவர்கள் என்று பார்த்தால், இன்று என்னதான் செய்யவில்லை அவர்கள்? ஆட்டோ, கார், பஸ், பிளேன், ஏன் ராக்கெட் ஏறி விண்வெளிக்கே கூடப் போயிட்டு வந்துட்டாங்க சாமி!  ஒவ்வொரு வருடமும், நம்ம பயலுகள விட அவுங்க தானே அதிகமா தேர்வுகள்ல பாஸ் ஆகுறாங்க. அப்படியிருக்க, இன்றைக்கு முறத்தை எடுத்து ஒரு பெண் அடிச்சா, புலி பயந்துக்கிட்டு ஓடிடுமோ என்னவோ, யாரு கண்டது!
 
அன்புடன்,
வங்கத்தமிழன்

Monday, July 23, 2007

கடோத்கச்சன் எலும்புக் கூடு

அன்பு நண்பர்களுக்கு வணக்கம்,
 
சென்ற வாரம் நண்பர் ஒருவரிடமிருந்து "கடோத்கச்சனின் எலும்புக் கூடு" அகழ்வு ஆராய்ச்சியாளர்களால் இந்தியாவில் ஏதோ ஒரு பாலைவனத்தில் கண்டுபிடிக்கப் பட்டிருப்பதாக ஒரு மின் அஞ்சல் வந்தது. அதில் ஒரு செய்தித்தாளில் வந்த செய்தியும் இணைக்கப்பட்டிருந்தது. கண்டுபிடிக்கப்பட்ட எலும்புக்கூட்டின் உயரம் சுமார் 60 / 70 அடி இருக்கும் என்று அச்செய்தி குறிப்பிட்டது. படத்தில் மண்டை ஓட்டின் அருகே நின்று கொண்டிருந்த ஒரு அகழ்வாராய்ச்சியாளர் ஏறக்குறைய மண்டை ஓட்டின் உயரமே காணப்பட்டார். இந்த இடம் உடனடியாக இந்திய ராணுவக் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டு, "நேஷனல் ஜியாக்கிரபிக் சொசைட்டி"யிடம் மேற்கொண்டு ஆராய்ச்சி அதிகாரம் விடப்பட்டிருப்பதாகச் செய்தி குறிப்பிட்டது. உடனே அதைப்பற்றி மேலும் விவரம் சேகரிக்கலாம் என்று இணையத்தில் தேடலானேன்.
 
பல இணையக் குழுக்களில் மகாபாரதக் கதையில் எப்படி கடோத்கச்சனைச் சித்தரித்திருந்தார்கள் என்றும் அதற்கு இந்த கண்டுபிடிப்பு எப்படிச் சான்று கூறுகிறது என்றும் பலர் வாதிட்டிருந்தனர். சிலர் கடோத்கச்சனின் உடல் எரிக்கப்பட்டதா, புதைக்கப்பட்டதா என்று கேள்வி எழுப்பியிருந்தனர். அதில் ஒருவர் பாரதப்போரில் கடோத்கச்சன், கர்ணனின் அம்பு பட்டு விழுந்து ஒரு படையையே அழித்தான். பிறகு அந்த உடலைத் தூக்கி அடக்கம் செய்ய முடியாததால் அங்கேயே விட்டுவிட்டனர், அது தான் இன்று கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது என்றால், அங்கே பல சராசரி மனிதச் சடலங்களும் காணப்பட்டிருக்க வேண்டுமே என்றும் வினவி இருந்தார்.
 
கூகிளில் தேடியதில் கிடைத்த தகவல் பின் வருமாறு.
 
மேற்குறிப்பிடப்பட்ட செய்தி முதலில் இணையத்தில் வதந்தியாக வெளியாகி அப்படியிப்படி பத்திரிகைகளுக்கும் பரவி விட்டிருக்கிறது. பங்களாதேஷ் நாட்டுச் செய்தித்தாளில் இந்த எலும்புக் கூடு சவுதி அரேபிய நாட்டுப் பாலைவனத்தில் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், " 'ஆட்' என்ற இனத்தினர் அத்தகைய அசுர வளர்ச்சி பெற்றிருந்தனர், அவர்கள் மக்களை நெறிப்படுத்த "அல்லா"வால் உருவாக்கப்பட்டனர், ஆனால் பிறகு கடவுளையே எதிர்க்கத் துணிந்ததால் அழிக்கப்பட்டனர்" என்றும் செய்தி வந்ததாகக் கேள்வி.
 
ஆனால் உண்மையில் 2000ம் ஆண்டு அமெரிக்காவில் "மாஸ்டோடான்" எனப்படும் விலங்கினத்தின் எலும்புகள் அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இந்த "மாஸ்டோடான்" இக்கால யானைகளில் மூதாதையராகக் கருதப்படும் "மாமத்" இனத்தைச் சேர்ந்தவை. இந்த படத்தை கணினி கொண்டு மாற்றி அமைக்கும் ஆர்வம் கொண்ட ஒரு கிராபிக்ஸ் கலைஞர் ஒரு மனித எலும்புக் கூட்டை அதனோடுச் சேர்த்து தனது இணையதளத்தில் வெளியிட்டிருக்கிறார். அது வதந்தியாக உருவெடுத்து செய்தியாகவே வெளிவரக்கூடிய அளவு கைகளும் கால்களும் முளைத்துவிட்டது.
 
கீழ்காணும் சுட்டிகளை சொடுக்கிப் பாருங்கள்
 
http://www.worth1000.com/emailthis.asp?image=18978 - செய்தியாக வெளியான படம்
 
http://www.rationalistinternational.net/article/20041001_en.html - விளக்கக் கட்டுரை
 
அன்புடன்,
வங்கத்தமிழன்

Tuesday, May 29, 2007

இன்றைய திருக்குறள்

அன்புத்தமிழ் நண்பர்களே வணக்கம்,

சீனத்தமிழர்கள் இணைய மடற்குழு தொடங்கிய நாள் முதல் இத்தகைய தினசரி மின் அஞ்சல் / வலைப்பூ (Blog) ஒன்றையும் தொடங்க வேண்டும் (ஏற்கெனவே, இரண்டு வருடங்களுக்கு முன்னர் வலைப்பூக்கள் எழுதிக்கொண்டிருந்தேன், ஆனால் அது இடையே தடைப் பட்டு விட்டது) என எண்ணிக் கொண்டிருந்தேன். ஆனால் வேலை பளு காரணத்தால் இதுநாள் வரை செய்யவில்லை. இப்போது அதைச் செய்யலாமென முடிவெடுத்து, அடுத்த வாரம் முதல் தினமும் ஒரு திருக்குறளை எடுத்துக் கொண்டு, அதற்கு விளக்கம் தரும்படி ஒரு சிறுகதையையும் கொடுக்க முயல்வேன்.

மேலும், மின் அஞ்சலோடு நிற்காமல் அந்த கருத்தை ஒலித்தொகுப்பாகவும் வலையேற்றி சுட்டியை (link) அஞ்சலோடு அனுப்பவுள்ளேன். நண்பர்கள் உங்கள் மேலான கருத்தைத் தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

நன்றியுடன்,
வங்கத்தமிழன்