அன்பு நண்பர்களுக்கு வணக்கம்,
சென்ற வாரம் நண்பர் ஒருவரிடமிருந்து "கடோத்கச்சனின் எலும்புக் கூடு" அகழ்வு ஆராய்ச்சியாளர்களால் இந்தியாவில் ஏதோ ஒரு பாலைவனத்தில் கண்டுபிடிக்கப் பட்டிருப்பதாக ஒரு மின் அஞ்சல் வந்தது. அதில் ஒரு செய்தித்தாளில் வந்த செய்தியும் இணைக்கப்பட்டிருந்தது. கண்டுபிடிக்கப்பட்ட எலும்புக்கூட்டின் உயரம் சுமார் 60 / 70 அடி இருக்கும் என்று அச்செய்தி குறிப்பிட்டது. படத்தில் மண்டை ஓட்டின் அருகே நின்று கொண்டிருந்த ஒரு அகழ்வாராய்ச்சியாளர் ஏறக்குறைய மண்டை ஓட்டின் உயரமே காணப்பட்டார். இந்த இடம் உடனடியாக இந்திய ராணுவக் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டு, "நேஷனல் ஜியாக்கிரபிக் சொசைட்டி"யிடம் மேற்கொண்டு ஆராய்ச்சி அதிகாரம் விடப்பட்டிருப்பதாகச் செய்தி குறிப்பிட்டது. உடனே அதைப்பற்றி மேலும் விவரம் சேகரிக்கலாம் என்று இணையத்தில் தேடலானேன்.
பல இணையக் குழுக்களில் மகாபாரதக் கதையில் எப்படி கடோத்கச்சனைச் சித்தரித்திருந்தார்கள் என்றும் அதற்கு இந்த கண்டுபிடிப்பு எப்படிச் சான்று கூறுகிறது என்றும் பலர் வாதிட்டிருந்தனர். சிலர் கடோத்கச்சனின் உடல் எரிக்கப்பட்டதா, புதைக்கப்பட்டதா என்று கேள்வி எழுப்பியிருந்தனர். அதில் ஒருவர் பாரதப்போரில் கடோத்கச்சன், கர்ணனின் அம்பு பட்டு விழுந்து ஒரு படையையே அழித்தான். பிறகு அந்த உடலைத் தூக்கி அடக்கம் செய்ய முடியாததால் அங்கேயே விட்டுவிட்டனர், அது தான் இன்று கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது என்றால், அங்கே பல சராசரி மனிதச் சடலங்களும் காணப்பட்டிருக்க வேண்டுமே என்றும் வினவி இருந்தார்.
கூகிளில் தேடியதில் கிடைத்த தகவல் பின் வருமாறு.
மேற்குறிப்பிடப்பட்ட செய்தி முதலில் இணையத்தில் வதந்தியாக வெளியாகி அப்படியிப்படி பத்திரிகைகளுக்கும் பரவி விட்டிருக்கிறது. பங்களாதேஷ் நாட்டுச் செய்தித்தாளில் இந்த எலும்புக் கூடு சவுதி அரேபிய நாட்டுப் பாலைவனத்தில் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், " 'ஆட்' என்ற இனத்தினர் அத்தகைய அசுர வளர்ச்சி பெற்றிருந்தனர், அவர்கள் மக்களை நெறிப்படுத்த "அல்லா"வால் உருவாக்கப்பட்டனர், ஆனால் பிறகு கடவுளையே எதிர்க்கத் துணிந்ததால் அழிக்கப்பட்டனர்" என்றும் செய்தி வந்ததாகக் கேள்வி.
ஆனால் உண்மையில் 2000ம் ஆண்டு அமெரிக்காவில் "மாஸ்டோடான்" எனப்படும் விலங்கினத்தின் எலும்புகள் அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இந்த "மாஸ்டோடான்" இக்கால யானைகளில் மூதாதையராகக் கருதப்படும் "மாமத்" இனத்தைச் சேர்ந்தவை. இந்த படத்தை கணினி கொண்டு மாற்றி அமைக்கும் ஆர்வம் கொண்ட ஒரு கிராபிக்ஸ் கலைஞர் ஒரு மனித எலும்புக் கூட்டை அதனோடுச் சேர்த்து தனது இணையதளத்தில் வெளியிட்டிருக்கிறார். அது வதந்தியாக உருவெடுத்து செய்தியாகவே வெளிவரக்கூடிய அளவு கைகளும் கால்களும் முளைத்துவிட்டது.
கீழ்காணும் சுட்டிகளை சொடுக்கிப் பாருங்கள்
http://www.worth1000.com/emailthis.asp?image=18978 - செய்தியாக வெளியான படம்
http://www.rationalistinternational.net/article/20041001_en.html - விளக்கக் கட்டுரை
அன்புடன்,
வங்கத்தமிழன்
No comments:
Post a Comment