Thursday, October 23, 2025

பாரதி என் தலைவன்

தன் ஒன்றே முக்கால் அடித் திருக்குறள்களால் தமிழனைக் கவர்ந்த பெருந்தகை வள்ளுவப் பெருந்தகை என்பது ஒவ்வொரு தமிழனும் உணர்ந்த ஒன்று. படிக்காமல் என் போல், எப்போதும் தெருவில் கிரிக்கெட் மட்டையுடனோ, கிட்டிப் புள் உடனோ, எங்கள் ஊரில் பலிங்கி என்று சொல்லப்பட்ட "கோலி'' விளையாட்டிலோ, பள்ளி நேரம் போக மீத நேரத்தைக் கழித்த மாணாக்கர் திட்டித் தீர்த்த ஒரு மாமனிதர் அவர். வீட்டுக்குள் நுழைந்தாலே, ''எப்போ பாரு வெளியிலையே சுத்தித் திரியத் தெரியற உனக்கு, நாலு திருக்குறள் தெரியுதா பார்ப்போம். எங்கே சொல்லு'' என்று கேட்கும் போது, 10 வயதில் எதிர்ப்பைத் தவிர வேறென்ன எதிர்பார்க்க முடியும்.

எட்டையபுரத்தார் [பள்ளியில் சில கவிதைகள் படித்திருந்தாலும்], கல்லூரியில் நான் உயர்வாக அண்ணாந்துப் பார்த்த சில பேராசிரியர் மூலம் என்னைக் கவர, அவர் தன் பால் ஒரு இனம் புரியாத ஈர்ப்பையும், தாக்கத்தையும் ஏற்படுத்தினார். கவிஞன் / புலவன் என்று சொல்லிக் கொள்பவன் எல்லாம், இவன் தாக்கம் இல்லாமல் இனி உலகம் இருக்கும வரை வரவே முடியாது என்பது போல் ஓர் வியப்பை ஏற்படுத்தியவர் பாரதி. ''டேய்'' என்று அழைத்தால், '' யாரக் கூப்பிடுற டேய் னு'' என்று குழந்தைகளே முறைக்கும் போது, ''பாரதி சின்னப் பயல், என்று கவிதை பாடு'' என்று காந்திமதிநாதன் பணிக்க, சினம்கொள்ளாமல், அவரையே வேடிக்கையாக ''காந்திமதிநாதனைப் பாரதி சின்னப் பயல்'' என்று பாடிய சாந்த குணம் ஒரு புறமும், பாதகம் செய்வோரை மோதி மிதிக்கச் சொன்ன சினமும் ஒருசேரப் பினைந்து உருட்டிய உருண்டை பாரதி. அந்தச் செருக்கும வணங்காமுடித் தனமும் தான் அன்றைய் அந்த ஈர்ப்புக்கும், இன்று வரை அது குறையாமல் இருக்கவும் காரணம்.

ஒரு முறை சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது வழியில் நிறுத்தினேன். மன நலம் பாதிப்புற்ற ஒருவர் ஆற்றங்கரை மதகில் அமர்ந்திருந்தார். அருகே நின்றிருந்ததால் அவர் மீது பார்வை பட்டது. அவர் என்னையே உற்றுப் பார்ப்பதாக உணர்ந்தேன். திடீரென எழுந்து வந்து, ''என்ன பார்க்குற'' என்று வினவி விட்டு மறுபடி சென்று அமர்ந்து கொண்டார். ''கிறுக்கன்'' என்று சொல்லப் பட்ட பாரதியும், கிட்டத்தட்ட அப்படித் தான். எப்போது அன்பாகப் பேசுவார், எப்போது கடிந்து கொள்வார், எப்போது ஏசுவார், அனைத்தையும் மறந்து ஒரு பித்தனைப் போல் எப்போது ஆனந்தக் கூத்தாடுவார் என்று கணிக்கவே முடியாது. இன்றைய கார்ப்போரேட் வாழ்க்கை முறையில், இப்படித்தான் வாழ வேண்டும் என்று ஒரு வட்டத்தைப் போட்டுக் கொண்டு வாழும் இத்தலைமுறைக்கு பாரதியை உணர்வது மிகக் கடினமே. வாழ்க்கையின் நவரசங்களும் ஒருசேரப் படைக்கப்பட்ட ஒரே இனம் மனித இனம், ஆனால் அவை எதையும் உணராது, தன் இனத்தால் படைக்கப்பட்டுத் தன் இனமே உணரும், நேரம், பணம் என்ற இரண்டையும் துரத்தி ஓடுவதும் மனித இனம் தான். எப்படி வாழ வேண்டும் என்ற வாழ்க்கைக் கல்வியைச் சொல்லிக் கொடுத்த ஆசிரியன் பாரதி.

தலைவனுக்குரிய பண்பு, தன் மக்களை அணைத்துச் செலவது, ஒரு தகப்பனைப் போலப் பொறுமையாகச் சொல்லிக் கொடுப்பது, எதிரியின் வலிமையைக் கணிப்பது மற்றும் அவனை வலுவிழக்கச் செய்யத் தொடர்ந்து அவனுக்குத் தொல்லைகள் கொடுப்பது என்று சொல்லிக் கொண்டே போகலாம். இவை அனைத்தையும் தன் பாடல்கள் மூலம் செய்த தலைவன் பாரதி. ''அச்சமில்லை அச்சமில்லை'' என்று ஊக்குவித்தவன், வெள்ளையனை வலுவிழந்த கையறு நிலைக்குத் தள்ள ''ஆனந்த சுதந்தரம் அடைந்து விட்டோம் - உன்னை ஒரு பொருட்டாகவே நாங்கள் கருதவில்லை என்று பாடினார்

No comments: