Thursday, September 02, 2004

புலித்தோல் போர்த்திய பசு

வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்
புலியிந்தோல் போர்த்துமேய்ந் தற்று
திருக்குறள்

மனத்தில் தூய்மையில்லாமல், நான் அனைத்தையும் துறந்துவிட்டேன் என பொய் வேடமிடுபவன் செய்கைகள், ஒரு பசுமாடு, புலியின் தோலைப் போர்த்திக் கொண்டு, தன் இயல்புத் தன்மையான புல் மேய்வதையும் கைவிட முடியாது, பார்ப்பவருக்குச் சுலபமாக அடையாளம் தெரியக் கூடியதாக அமையும்.

உண்மையில் துறவரம் மேற்கொள்பவன், மற்றவர் தன்னைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதைப் பற்றிக் கவலைப்படாதவனாக இருப்பான். அவன் சுகம், துக்கம் இரண்டாலும் பாதிக்கப்படாமல், எதற்கும் முக்கியத்துவமும் கொடுக்காமல் இருப்பான். அவனுக்கு விளம்பரம் தேவையில்லை (விளம்பரம் தேவையற்ற நிலையையே துறவரம் என்றும் கொள்ளலாம்). மாறாக, எவன் ஒருவன் போலி வேடமிட்டுக் கொண்டு, துறவி என பறைசாற்றிக் கொண்டு திரிகிறானோ, அவனது முக்கியக் குறிக்கோளே விளம்பரப்படுத்திக் கொள்வது தான். எங்கு சென்றாலும், “நான்”, “எனது” “என்னால் முடியும்” என்று தம்பட்டம் அடித்துக் கொள்ளும் பேச்சாகத்தான் இருக்கும் அவன் பேச்சு. அதிலிருந்தே, அவன் மனத்தூய்மையில்லா போலித்துறவியா, அல்லது எந்த நிலையிலும் பாதிக்கப்படாத முற்றும் துறந்தவனா என்று நம்மால் ஒருவனை அடையாளம் கண்டு கொள்ள முடியும்.

வங்கத்தமிழன்

No comments: