Saturday, September 04, 2004

“ஆத்தீகமும் நாத்தீகமும்”

பொதுவாக, ஆத்தீகம் பேசுபவர்கள், நாத்தீகம் பேசுபவர்களை ஏதோ குற்றவாளிகள் போல், சமூக விரோதிகள் போல் பார்ப்பதும், நாத்தீகம் பேசுவோர், ஆத்தீகம் பேசுபவரை, ஆதிக்கம் செய்பவராய், ஹிட்லராக உருவகப்படுத்தி பார்ப்பதும், உலகத்தில் காலம் காலமாக இருந்து வரும் ஒரு நிலை. “அந்த மனிதருக்கு, இரண்டு மகன்கள். ஒருவன், காலையில் எழுந்திருந்தால், குளித்து, சுத்தபத்தமாக, நெற்றி நிறைய திருநீறு பூசிக் கொண்டு, கோயிலுக்குப் போய், கடவுள் பக்தியோடு எவ்வளவு நல்ல பிள்ளையாக இருக்கிறான்? இன்னொன்றோ (அஃறிணையில்) நாத்தீகம் பேசிக் கொண்டு, கடவுள் இல்லையென்று போஸ்டர் அடித்து தெருக்களில் ஒட்டிக்கிட்டு திரியுது” என்பது போன்ற பேச்சுக்கள் உங்களில் பலர் கேட்டிருப்பீர்கள்.

சரிங்க, ஆத்தீகம் பேசினால் தான் நல்லவரா, நாத்தீகம் பேசுபவரெல்லாம், நல்ங்கெட்டவரா, என்னங்க இது நியாயம் என்று நாத்தீகர்கள் புலம்புவது காதில் விழுகிறது. அண்மையில் “அன்பே சிவம்” என்று ஒரு படம் வந்தது. அதில் ஒரு பாடல் வரி, “ஆத்தீகம் பேசும் அடியவர்க்கெல்லாம், சிவமே அன்பாகும், நாத்தீகம் பேசும் நல்லவர்க்கெல்லாம், அன்பே சிவமாகும்” என்று மிகவும் அருமையாக சொற்களை கோர்த்திருக்கிறார். ஆமாங்க, நாத்தீகம் பேசினாலும், ஆத்தீகம் பேசினாலும், எல்லா மனிதர்களும் இயல்பாக நல்லவர்களே. “அப்பொ ஏம்பா சாதிச்சண்டை போதாதுன்னு, சாமிச்சண்டை வேறே போட்டுக்கிறாங்க” என்கிறீரா?

தனக்கும் மேலே ஒரு சக்தியுளது என்பதை கேள்விகள் கேட்காது ஒப்புக் கொள்ளும் பிரிவினர், அதை அறிவியல்வழி ஆராயத்துடிக்கும் வேறொரு பிரிவினரின் கேள்விகளுக்கு சரியான விளக்கம் அளிக்கத் தவறும் பொழுதோ, அப்படிக் கொடுக்கப்பட்ட விளக்கம் திருப்தியளிப்பதாக இல்லாத போது அதற்காக மறுசாரார், எளிதில் எரிச்சலடைவதோ தான் இந்த சாமிச்சண்டைகளுக்குக் காரணமாக இருக்க முடியும். ஒரு வடநாட்டுக் கவிஞர் (கபீர்தாஸ்) தன் பாடல் வரிகளில் “கடவுள் இருந்து, ஒருவன் அவரை இல்லை என்று சொன்னால் அந்த கடவுள் கோபித்துக் கொள்ளும், அதே சமயம் கடவுள் உண்மையிலேயே இல்லாத நிலையில், அவர் இருக்கிறார் என்றால் அதனால் அவனுக்கு ஏதும் நட்டமில்லை. ஆகையால், கடவுள் இருக்கிறார் என்று நம்புவது, இரண்டு கைகளிலும் இனிப்பான லட்டுக்களை வைத்து உண்பதற்குச் சமம்” என்று சொல்கிறார். ஆகையால், நான் கடவுள் இருக்கிறார் என்று சொல்கிறேன் என்று ஆத்தீகவாதிகளும், “கடவுள் கருணாமூர்த்தி என்கிறீர்கள், அத்தகைய கருணாமூர்த்தி ஒருவேளை இருந்து, அவரை நான் இல்லையென்று சொல்ல அவர் கோபமடைவாராயின் அவர் கருணாமூர்த்தியில்லை, அப்படிக் கோபமடையும் ஒரு பொருளை நான் மதித்து நடக்க வேண்டிய அவசியமுமில்லை என்று நாத்தீகவாதிகளும் பேசிக் கொண்டாலும், நாம் அனைவரும் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகளல்லவா? “ஒரு தாயின் வயிற்றில் பிறந்தோர், தம்முள் சண்டை செய்தாலும் சகோதரரன்றோ?”

வங்கத்தமிழன்

No comments: