Thursday, April 25, 2013

வாலறிவன்

"கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
 நற்றாள் தொழாஅர் எனின்"
- கடவுள் வாழ்த்து; திருக்குறள்

வள்ளுவத்தில் சொல்லப்பட்ட பொருட்படி, ஒருவன் என்ன கற்றாலும் என்றும் மாறா உயர்ந்த அறிவு நிலையான கடவுளை வணங்காவிட்டால் என்ன பயன் என்று கொள்ளலாம்.

"வால்" என்ற சொல்லுக்கு, இளமையான, வாலிபமான, களங்கமில்லா அல்லது தனக்கெனத் தனித் தன்மையில்லா / ஊடுருவக் கூடிய (transparent) என்றெல்லாம் பல பொருட்கள் எடுத்துக் கொள்ளலாம். அத்தகைய களங்கமில்லாத, அனைத்துமாகி இருக்கும் இறைவன் தான் எனக்குள்ளும், உனக்குள்ளும், எல்லா உயிர்களுக்குள்ளும் இருக்கிறான் என்ற அறிவைப் பெறாமல் கற்ற கல்விக்கு என்ன பயன் என்று சற்றே ஊன்றி கவனித்துப் பொருள் கொள்ளலாமோ!

அன்புடன்,
வங்கத்தமிழன் (ஜெயகாந்த் ராமமூர்த்தி)

Wednesday, April 24, 2013

அகர முதல எழுத்தெல்லாம்!

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு
- கடவுள் வாழ்த்து; திருக்குறள்

நேர்பட பொருள் கொண்டால் "எழுத்துக்களுக்கு எவ்வாறு 'அ' முதன்மையானதோ, அது போல இவ்வுலகிற்கு முதன்மையானவன் அந்த கடவுள் எனப் பொருள் கொள்ளலாம்.

சரி, சற்றே மாற்றிச் சிந்திப்போம்! எழுத்தரிவித்தவன் இறைவன் என்ற கருத்தைத் தான் வள்ளுவர் இப்படிச் சொல்லியிருப்பாரென்று தோன்றும் நமக்கு.

மொழிக்கு முதன்மையான ' அ'கரம் தொடங்கித் தமிழைக் கற்றுக் கொடுப்பவன் ஒரு மாணாக்கனின் உலகில் (வாழ்வில்) அந்த ஆதிக் கடவுளைப் போல் முக்கியத்துவம் பெறுவான் என்றும் பொருள் கொள்ளலாமே!

ஒரு நாடு முன்னேறத் தடையாக இருப்பது கல்வியறிவின்மை என்பது நிதர்சனமான உண்மை. படித்து முன்னேற வேண்டுமென்ற ஆர்வம் கொண்ட பல குழந்தைகள் படிக்க வழியின்றித் தவிக்க, அவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுத்தோ, அல்லது படிக்க வழிவகைகள் செய்தோ ஊக்குவிப்பவனும் 'எழுத்தறிவித்தவன்' தானே?

நம்மால் முடிந்தவரை நான்கு குழந்தைகளுக்கு படிக்க வசதிகள் செய்து கொடுக்கலாமே!

அன்புடன்,
வங்கத்தமிழன் (ஜெயகாந்த் ராமமூர்த்தி)

Tuesday, April 23, 2013

தமிழ் பதிப்புகள் - மீண்டும் தொடங்க உத்தேசம்

அன்பு நண்பர்களுக்கு வணக்கம்,

நான் ஒரு நான்கு ஆண்டு காலம் கல்கத்தா நகரத்தில் அலுவல் காரணம் வாழ்ந்திருந்தேன். அப்போது தமிழில் எழுத வேண்டுமென்ற அவா மிகுதியில் சிங்கப்பூரிலிருக்கும் "ஐயா. மாகோ" அவர்கள் தொடங்கி நிர்வகித்துக் கொண்டிருக்கும் "உலகத் தமிழர் சங்கம்" (Global Tamils) குழுவில் சிறு துணுக்குகள் எழுதத் தொடங்கினேன். கல்கத்தா (வங்காளம்) விலிருந்து எழுதியதால் "வங்கத்தமிழன்" என்று அழைக்கலாமென மாகோ அவர்கள் சொல்ல, அதையே புனைப்பெயராக வைத்து வலைப்பூக்கள் (blog) பதித்து வந்தேன்.

பிறகு சீனா சென்று நான்கு ஆண்டு காலமும் கூட அவ்வப்போது எழுதிக் கொண்டிருந்தேன். சென்னை திரும்பிய பின் அது நின்று விட்டது. அதை மீண்டும் தொடங்க உத்தேசித்து இறங்குகிறேன், கூடியவரை விடாமல் எழுதுவேன் என்ற நம்பிக்கையுடன்.

அன்புடன்,
வங்கத்தமிழன் (ஜெயகாந்த் ராமமூர்த்தி)

Friday, April 19, 2013

ஐந்து ஆண்டுகளுக்குப் பின் மறந்து போன என் வலைப்பூ கணக்கை மீண்டும் தூசு தட்டியுள்ளேன்!

நேரமில்லை என்ற நொண்டிச் சாக்குடன் இத்தனை ஆண்டுகள் blog செய்யாததை நியாயப் படுத்தியதாக நினைத்துக் கொண்டு, மீண்டும் என் கருத்துக்களை இங்கே பதிக்கத் தொடங்கலாமென உத்தேசித்திருக்கிறேன்.

பார்ப்போம், நான் வெற்றி பெறுகிறேனா அல்லது எனக்குள் இருக்கும் அந்தச் சோம்பேரி மறுபடியும் தலை தூக்குகிறானா என்று.

அன்புடன்,
வங்கத்தமிழன் (ஜெயகாந்த் ராமமூர்த்தி)