Thursday, July 29, 2004

ஈகை

வறியார்க்கொன் றீவதே ஈகைமற் றெல்லாங்
குறியெதிர்ப்பை நீர துடைத்து
திருக்குறள்

கொடை என்பது இல்லாத ஒருவர்க்கு, தன்னிடமுள்ள ஒன்றை மனமுவந்து கொடுப்பது. ஆனால் ஒருவனிடம் இருக்கிறது என்று தெரிந்தும் அவனுக்கு ஒன்று கொடுத்தால் அது ஏதோ பிரதிபலனை எதிர்பார்த்துக் கொடுக்கப்படுவதற்கு ஈடாகும்.

பொன் பொருள் போன்ற போகப் பொருட்களைவிட மிக அத்தியாவசியம் ஒரு மனிதனுக்கு உண்ண உணவும் உடுத்த உடையும் தான். பசியில் வாடுபவனுக்கு ஒரு வாய் சோறு கொடுப்பதைவிட உயர்ந்த செயல் வேறொன்றும் இல்லை. அங்ஙனம் பசி என்று வந்து கேட்கும் இறைவனடியார்க்கு கணவன் அருகில் இல்லாததால் அவனுடன் சேர்ந்து உணவு வழங்கி உபசரிக்க வழியில்லையே என்ன கண்ணகி வருந்தியதாக இளங்கோவடிகள் பாடியுள்ளார்.

அப்படி ஒரு தேவையுமில்லாது ஒருவன் கேட்டுப் பொருள் பெறுவது வழிப்பறிக் கொள்ளையைவிட மோசமானது. அப்படி வறிய நிலையில் இல்லாதவனைத் தேடிச் சென்று பொருள் கொடுப்பது கையூட்டுக்கு (லஞ்சத்திற்கு) ஈடானது என்கிறார் வள்ளுவப் பெருந்தகை.

வங்கத்தமிழன்

Wednesday, July 28, 2004

மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி

மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவந்தந்தை
என்னோற்றான் கொல்எனுஞ் சொல்
திருக்குறள்

“உன்னை மகனாக அடைந்ததன் இன்பத்தை நான் இப்போது தான் பெறுகிறேன்”, என்றோ, “உன்னைப் பிள்ளையாகப் பெற்றதற்கு நான் குட்டிச் சுவற்றில் சென்று முட்டிக் கொள்ளலாம்” என்றோ கூற்றுக்கள் தந்தையர்க்கும் அவர் மகவுகளுக்கும் இடையே நடக்கக் கூடியது தான். பெருமை பூரிக்கும் ஒரு தந்தை, தன் மகனைப் போற்றியும், அவன் செயல்களால் அவமானம் அடையும் தந்தை, “ஏன் எனக்கு மகனாகப் பிறந்து இப்படி உயிரை வாங்குகிறாய்” என்றும் சொல்லக் கேட்டிருக்கிறோம்.

சரி, இந்த நிலை சரி தானா? உண்மையிலேயே, மாதா பிதாவின் செயல்களுக்கும் மக்களின் செயல்களுக்கும் தொடர்பில்லையா? ஒரு உதாரணத்திற்குப் பார்ப்போம், தந்தை சிகரெட் பிடிக்கிறார், மகனும் பள்ளிக்கல்வி முடிக்கும் முன்னரே, திருட்டு தம் அடிக்கிறான். விவரமறிந்த தந்தை, “ஏன் சிகரெட் பிடிக்கிறாய்” என்று கேட்க முடியுமா? சரி நான் தான் கெட்டுப் போய்விட்டேன், நீயாவது ஒழுங்காக இருக்கக் கூடாதா? என்ற கேள்விக்கெல்லாம் மதிப்பிருக்காது. உலகில் பல மகான்கள் இருந்தனர், “புத்தர், ஏசு, மகாத்மா” போன்று. அவர்கள் சொன்னதைச் செய்தனர், அதனால் தான் மதிப்பு, இல்லையேல் துரும்பைவிட துச்சமாகத் தானே மதிக்கப் பட்டிருப்பர்.

வள்ளுவர் சொன்ன நிலை, ஒரு “அசாதாரண”, “தலை சிறந்த”, “உன்னத” நிலையை எட்டிய மகன், தன் தந்தைக்கு அத்தகைய பெயரைப் பெற்றுத் தருவான். எல்லா மகன்களும், “உன்னால் முடியும் தம்பியில்” வரும் கமலஹாசன் கதாபாத்திரம் போல தந்தைக்கு பெயர் சேர்க்க வேண்டுமாம், ஆனால் இந்த தந்தைகள் மட்டும் திருந்தவே மாட்டார்களாம். என்னங்க கதை (நான் எல்லா தந்தையர்களையும் சொல்லவில்லை, ஒரு சில பொறுப்பில்லாதவர்களை மட்டும் தான்). பாட்டு “எந்தக் குழந்தையும் நல்லக் குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே, அவர் நல்லவராவதும், தீயவராவதும் அன்னை வளர்ப்பினிலே” என்று தானேங்க சொல்லுது, “தந்தை வளர்ப்பினிலே”னு சொல்லலியே, என்று பொறுப்பற்றுத் திரிந்துவிட்டு, மகன் மட்டும் உதவி செய்யணும். அத்தகைய உதாரணக் குழந்தையைப் பெற இமய மலைக்குப் போய் தவம் (நோன்பு) செய்யச் சொல்லவில்லை வள்ளுவர், உன் வாழ்க்கையையே ஒரு நோன்பாக, யாகமாக வாழ்ந்தால், உன் பிள்ளைகளைப் பார்த்து, நிச்சயம் இந்த சமுதாயம் “இவன் தந்தை என்னோற்றான் கொல்” என்று சொல்லும்.

வங்கத்தமிழன்

Tuesday, July 27, 2004

“நாவடக்கம்”

யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு
திருக்குறள்

அடக்கம் என்ற தன்மை ஒருவனை தேவனுக்கு ஈடாக உயர்த்தும் என்பது திருவள்ளுவர் சொல்லிய வாக்கு. அந்த வகையில் அடக்கமுடையவனுக்கு எல்லாவிதத்திலும் சிறப்பு என்று நாம் அறிகிறோம். ஒருவன் தன் நாவைக் கட்டுப்படுத்த வேண்டும் (இந்த இடத்தில் வயிற்றுக்கு ஈயப்படும் பொருளைக் கொண்டு வள்ளுவர் சொல்லவில்லை). நாவடக்கம் என்றால், எந்த இடத்தில் எப்படிப் பேச வேண்டும் என்று பகுத்தறியும் தன்மை. ஒருவனுக்கு மிகவும் அவசியம் “நாவடக்கம்” அல்லது “சொல்வன்மை”. எதை எங்கே பேசுவது என்று தெரியாது பேசிவிட்டு, பிறகு ஐயோ பேசினோமே என்று வருத்தப் படுவதில் என்ன பலன்?

ஆகையால் ஒரு மனிதன், (இக்கால அரசியல்வாதி போலில்லாமல்) நாவடக்கம் கொண்டவனாக இருந்தால் அவன் பெருமையடைவான், மாறாக வாயில் வந்தபடிப் பேசிவிட்டால், மற்றவரின் ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாகி அசிங்கப்பட்டுப் போவான்

வங்கத்தமிழன்

Monday, July 26, 2004

பெண்மணி அவள் கண்மணி

ஆணை சிவ வடிவமாயும், பெண்ணை சக்தி வடிவமாகவும், சக்தியில்லையேல் சிவமில்லை என்றும் வைத்து, பெண்ணை பெருமைபடுத்தியுள்ளது தமிழ் பண்பாடு. அத்தகைய பெண் சக்தியே இப்போது சக்தியற்று இருக்கிறது தமிழ்நாட்டில். “செந்தமிழ் நாட்டு தமிழச்சியே, சேலை உடுத்த தயங்குறியே” என்று பாட்டு கூட வந்துவிட்டதல்லவா? ஒரு ஆணைவிட சக்தி அதிகம் படைத்தவள் பெண். “கண்ணின் கடை பார்வை காதலியர் காட்டிவிட்டால், மண்ணில் குமரர்க்கு மாமலையும் ஓர் கடுகாம்” என்ற பாடல் வரி கூறுவது என்ன. ஒரு ஆணுக்கு கண்ணின் கடைபார்வையால் அத்தகைய மாபெரும் சக்தியை தரவல்ல பெண்ணிடம் எவ்வளவு சக்தி நிறைந்துள்ளது? ஆனால், இந்த பெண் சக்தி ஏனப்பா தவறான வழியில் தடம் மாறிச் செல்கிறது? திரையிலும், தொலைக்காட்சியிலும், எதற்கெடுத்தாலும், எதைப் பார்த்தாலும், குறை ஆடை பெண்கள் இல்லாத நிலையே பார்க்க முடியவில்லை.

மகாத்மா காந்தி அரையாடை உடுத்தி உலகப்புகழ் அடைந்தார் என்பதால், இக்கால பெண்கள் திரையில் குறையாடை பதுமைகளாக காட்சியளிக்கிறார்களோ? இதற்கு சப்பைக்கட்டு வேறு, “என்னங்க செய்ய, அப்படி ஆடை குறைக்க மறுத்தால் வயிற்றுப் பிழைப்புக்கு என்ன செய்வது” என்று. காட்சிப் பொருளாக இல்லாமல், விளம்பரப் பொருளாக இல்லாமல், மேம்பட்டு உலக அரங்கில் முன்னேறி, தங்களுடன் இருக்கும் ஆண்களுக்கு சாதிக்க சக்தியைத் தந்து உலக மேம்பாட்டுக்கு அடித்தளம் அமைக்க வல்ல பெண்ணினமே, “அறிவை விரிவு செய், அகண்டமாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை” என்ற பாட்டுக்கு அரசனின் சொற்படி, நீயும் எழுந்து, ஆண்களாகிய எங்களுக்கும் சக்தியைத் தந்து முன்னேற்ற வா.

வங்கத்தமிழன்

Saturday, July 24, 2004

அன்பு

 அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது
திருக்குறள்

நல்லறனும், தூய அன்பும் ஒரு இல்லத்தில் இருக்குமாயின், அந்த குடும்பத்தில் நற்பண்பும், வாழ்க்கையின் பயனும் கிடைக்கப் பெறும். இப்போது, இத்தகைய அன்பு, நல்லறனும், நற்பண்புகளும் பல இல்லங்களில் காணப்படாததால் தான் விவாக ரத்து போன்ற பிரச்சனைகள் தினம் தினம் அதிகரித்து வருகிறது.

கணவனுக்கு தகுந்தாற் போல் மனைவி படிந்து போக வேண்டும் என்று கணவன் நினைப்பதும், ஆண் ஆதிக்கம் அதிகமாகிறது, ஆகையால் படிந்து போகக் கூடாது என்று மனைவி நினைப்பதும் தான் பெரும்பாலும் இத்தகைய பிரச்சினைகள் வர காரணம். இவ்வாறு இல்லாது, கணவன் மனைவி இருவரும் ஒருவருக்கு ஒருவர் அன்பை பரஸ்பரம் பரிமாறிக் கொண்டு, இருவரும் சமம் என்ற எண்ணத்தோடு வாழ்க்கையை எதிர்நோக்கினால், “நல்லதொரு குடும்பம், பல்கலை கழகம்” என்ற கூற்றுக்கு ஏற்ப பயனுள்ளதாக அமையும்.

வங்கத்தமிழன்

Friday, July 23, 2004

செயற்கரிய

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்
திருக்குறள்

சொன்ன நல்ல விஷயத்தினை நல்லவிதமான பொருள் கொள்ளாமல் நாட்டுல போலி சாமியார்கள் நிறைய ஆயிட்டாங்கப்பா. “டேய், அந்த சாமியார் ரொம்ப சக்தி வாய்ந்தவருடா, கண்ணால உத்துப் பார்த்தார்னா ஹோம குண்டத்தில நெருப்பு தானா பத்திக்குது” என்றும், “மந்திரத்துல மாங்கா வர வைக்கிறாரு அந்த மகான்” என்றும் மாங்காய் மகான்களை தினந்தோறும் நாம உருவாக்கிட்டு வரோம்.

இது போன்ற மகான்கள் செய்வதெல்லாம் செயற்கரிய செயலில்லைங்க, இவர்கள் தந்திரமா நம்ம ஏமாத்திக்கிட்டிருக்காங்க. செயற்கரிய என்றால் என்னங்க? அறிவுக் கூர்மையாலும், தொடர்ந்த முயற்சியாலும், ஆராய்ந்து கொள்ளும் திறன் மற்றும் இரக்கத் தன்மை போன்றவற்றாலும் தான் பெரியோர் உருவாகின்றனர். இத்தகைய பெரியோர், அடைய முடியாத உயரங்களைச் சுலபமாக தானும் அடைந்து தன்னுடன் உள்ளவர்களையும் வழி நடத்திச் செல்வர். இப்படிப்பட்ட தன்மைகளில்லாதவர்கள் சிறியர்கள். அவர்களால் வாழ்க்கையில் தானும் முன்னேற முடியாது, மற்றவர்க்கும் முட்டுக் கட்டையாக இருப்பர்.

அன்புடன்,
வங்கத்தமிழன்

Monday, July 19, 2004

அஞ்சாமை

 
அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும்
எஞ்சாமை வேந்தற் கியல்பு
திருக்குறள்

அஞ்சாத தன்மை, கொடைத்தன்மை (இரக்க சிந்தனை), சிறந்த அறிவு மற்றும் அயரா முயற்சி ஆகிய பண்புகள் அரசர்க்குத் தேவை.

அரசன் என்பவன் நாட்டை ஆள்பவனாகத் தான் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. ஒரு சிறு அலுவலகத்தில் நான்கு நபர்களை வைத்து வேலை வாங்குபவனும், ஒரு குழுவிற்கு தலைமை தாங்குபவனும், சமூக சேவை செய்பவனும் (யாராக இருப்பினும்) அவன் தன் நிலையில் ஒரு பொறுப்பை சுமந்து அதை நிறைவேற்ற வேண்டியுள்ளதால் அரசனுக்கு (தலைவன் என்று பொருள் கொள்க) ஈடானவன்.

அத்தகைய தலைமைப் பொறுப்பில் உள்ள ஒருவன் கொள்ள வெண்டிய பண்புகள் தாம் மேற்காணும் பண்புகள். எடுத்த காரியத்தில் பின் வாங்காத உறுதி, தன்னுடன் இருப்பவர் நலம் பேணும் இரக்க சிந்தனை, திட்டப்படி எடுத்த செயலை செவ்வனே செய்யும் அறிவாற்றல், மற்றும் மேன்மேலும் முன்னேற அயரா முயற்சி, இவை நான்கும் கொண்ட ஒருவன் ஒரு சிறந்த தலைவனாக எப்போதும் திகழலாம். அலுவலகங்களில் பெரும்பாலும் கிடைக்கப் பெறும் மேலதிகாரிகள் தனக்கு கீழே உள்ள தொழிலாளர்களுக்கு கம்சனாகவும், பகாசுரனாகவும், நரகாசுரனாகவும் தெறிவதற்கு முக்கிய காரணமே, அந்த தலைமை பொறுப்பில் உள்ள நபர் மேற்காணும் பண்புகளில் ஏதாவது ஒன்றையோ, அல்லது நான்கையுமேயோ பெறாத நிலையால் தான்.

அன்புடன்,
வங்கத்தமிழன்

Saturday, July 17, 2004

வாய்மை

 வாய்மையெனப் படுவது யாதெனில் - யாதொன்றும்
தீமையிலாத சொலல்.
திருவள்ளுவர்

பொய் சொல்லக் கூடாது என்று சொல்லிக் கொடுத்து விட்டு, இது என்ன பொய் சொல்லலாம் என்கிறாரே வள்ளுவர் என்று நினைக்கிறீரா? அவர் என்ன சொல்கிறார், தீமை ஏற்படுத்தாத எந்த ஒரு சொல்லும் உண்மை போன்றது. படுக்கையில் கிடக்கும் ஒரு மனிதனின் உடல் நிலை கவலைக்கிடமாக இருக்கும் போது, கடவுளை நம்புங்கள் என்று மருத்துவர் சொன்ன பிறகு அந்த மனிதனிடம் "ஒன்றும் கவலைப்படத் தேவையில்லை, நீ விரைவில் குணமடைவாய், டாக்டரே சொல்கிறார்" என்று சொல்வதில்லையா? அது பொய் தான் என்றாலும், இருக்கும் வரை அந்த மனிதன் நிம்மதியாக இருந்து செல்லட்டுமே என்று தானே அத்தகைய பொய் சொல்கிறோம். வள்ளுவர் அதைத் தான் வாய்மைக்கு ஈடானது என்கிறார். மாறாக, மகாத்மா காந்தி சொல்லியிருக்கிறார், ஏசு நாதர், நபிகள் நாயகம் எல்லாரும் சொல்லியிருக்கிறார்கள் ஆகையால் நான் உண்மை தான் பேசுவேன் என்று அந்த நோயாளியிடம், "ஐயா, டாக்டர் சொல்லிவிட்டார், நீ சீக்கிரம் போய்டுவேன்னு, மூட்டைய கட்டு என்றால் என்னவாகும்.

ஜெயகாந்த் இராமமூர்த்தி.

Friday, July 16, 2004

கருத்துப் பரிமாற்றத்தின் முக்கியத்துவம்

 
கருத்துப் பரிமாற்றத்தின் முக்கியத்துவம்
“யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்” என்றதற்கு ஏற்ப, ஒவ்வொரு மனிதனும் தனக்குத் தெறிந்தவைகளை மற்றவரோடு பகிர்ந்து கொண்டால் அனைவர்க்கும் நன்மை. நாம் தனி மனிதர்கள் இல்லை, ஒரு சமுதாயத்தில் வாழ்கிறோம், ஆதலால் நம் வெற்றியின் ரகசியத்தை மற்றவர்களோடு பகிர்ந்து கொண்டால் சமுதாயம் மேம்படும். சமுதாயம் மேம்படும் போது தனி நபர் நிலையும் மேம்படும், ஆனால் “சமுதாயம் மேம்பட்டால் என் நிலை தாழ்ந்துவிடும்” என்று எண்ணும் ஒரு மனிதன், தன் கருத்துக்களை மற்றவரோடு பகிர்ந்து கொள்ள மறுக்கிறான், அதனால் தன் நிலையையும் மேம்படுத்திக் கொள்ளாமல், சமுதாய மேம்பாட்டிற்கும் உதவாமல், ஒன்றுக்கும் உதவாத நிலையை அடைகிறான்.

இப்படி எடுத்துக் கொள்வோம். உங்களிடம் இரண்டு ரூபாய் இருக்கிறது, என்னிடம் இரண்டு ரூபாய் இருக்கிறது. உங்களிடம் வேண்டி அந்த இரண்டு ரூபாயை நான் பெற்றுக் கொள்கிறேன், இப்போது என்னிடம் நான்கு ரூபாய் உளது ஆனால் உங்களிடம் ஒன்றும் இல்லை. சரி ரூபாய்க்கு பதிலாக நம் இருவரிடமும் தலா இரண்டு நல்ல கருத்துக்கள் உள்ளன. இருவரும் அமர்ந்து கருத்துகளை பரிமாறிக் கொண்டபின் பாருங்கள், இருவரிடமும் தலா நான்கு கருத்துக்கள் அல்லவா இருக்கிறது? அப்படி இருக்க ஏன் கருத்துகளை பரிமாறிக் கொள்ள ஏன் தயங்குகிறான் மனிதன்?

அன்புடன்,

வங்கத்தமிழன்,
(ஜெயகாந்த் ராமமூர்த்தி)

Thursday, July 15, 2004

எது நட்பு?

“நகுதற் பொருட்டன்று நட்டல் - மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தல் பொருட்டு”
திருவள்ளுவர்.

ஃபிகர பாருடா மாமு சும்மா டக்கராகுது, நண்பா ஒண்ணா ஒக்காந்து போற வர ஃபிகர வெட்டலனா இன்னா மச்சி ஃபிரண்ட்சிப், என்று சென்னை தெருக்களில் (பெரும்பாலும் கல்லூரி அருகாமையில்) பிகில் (whistle) விடும் பெருந்தகைகளை நாம் நிறைய பார்த்திருப்போம். இதில் வாயில் மிக style ஆக சிகரெட் வேறு. இவற்றைப் பார்க்கும் போது வள்ளுவர் நட்பைப் பற்றிச் சொன்னது நம் நினைவிற்கு வரும்.

எதுங்க நட்பு? சும்மா கெட்ட வழிகளில் சென்று கும்மாளம் போடுவதா நட்பு? ஒருவன் தவறு நிறைய செய்யும் பொழுது, அவனை இடித்து திருத்தி நல்வழிப் படுத்துவது தான் நட்பு என்றார் வள்ளுவர்.

அன்புடன்,
வங்கத்தமிழன்
(ஜெயகாந்த் இராமமூர்த்தி)

தினம் ஒரு சிந்தனை

தினம் ஒரு சிந்தனை தேதி: 15 ஜூலை 2004

இன்றைய சிந்தனை

“இன்கண் உடைத்தவர் பார்வல் பிரிவஞ்சும்
புன்கண் உடைத்தால் புணர்வு”
திருக்குறள்

ஒரு காதலி காதலனுடன் சேர்ந்திருப்பது பற்றி கூறுவதாக அமைந்த பாடல் இது என்றாலும், இதில் சொல்லப்பட்ட கருத்து மனிதனின் துயரங்களுக்கு எது காரணம் என்பதை விளக்குவதாக உள்ளது என்பதால் இந்த குறளை எடுத்துக் கொள்வோம்.

“அவருடன் காதல் கொள்ளத் தொடங்கிய காலத்தில், அவரைக் கண்டாலே மனம் மகிழ்ச்சியால் குதூகலிக்கும், ஆனால் இப்போதோ அவரை ஆறத்தழுவிக் கொள்ளும் போதும், அவரை எப்போதாவது பிரிய நேரிடுமே என்ற அச்சத்தால் மனம் கலங்குகிறது” என்று தலைவி தலைவன் மீது கொண்ட காதல் பற்றிச் சொல்வதாக அமைந்தது.

ஒரு சராசரி மனிதனை இந்த தலைவியின் நிலையில் வைத்து பார்ப்போம். அவனிடம் இன்று கையில் என்ன இருக்கிறதோ அதை கண்டு மகிழ்ச்சி அடைய மறுக்கிறான். இன்னது நடந்துவிடுமோ என்ற பயத்திலேயே காலத்தை ஓட்டிவிடுகிறான். இன்று என் கையில் இரண்டு ரூபாய் இருக்கிறது, ஆனால் நானோ அந்த இரண்டு ரூபாயை எப்படி சரியாக பயன்படுத்தி மகிழ்ச்சியடைவது என்று பாராமல், என்னிடம் பத்து ரூபாய் இருந்தால் நான் மகிழ்ச்சியாக இருப்பேன் என்று எண்ணுகிறேன். அந்த பத்து ரூபாய் கையில் வந்தால் தவிர மகிழ்ச்சியடைய மறுக்கிறேன். நாளை ஒரு வேளை பத்து ரூபாய் கிடைத்து விட்டால் மகிழ்ச்சி வருமா? அப்போது மனம் நூறு ரூபாயை நாடும். (ஆக இதற்கு முடிவே இல்லை). எப்போது மனிதன் நிகழ்காலத்தில் இருப்பதால் மகிழ்ச்சியடைந்து வாழக் கற்றுக் கொள்கிறானோ, அப்போது தான் அவனுக்கு வாழ்க்கை இனிக்கும் என்ற கருத்தை இந்த “பிரிவு ஆற்றாமை” திருக்குறளிலிருந்து நாம் கற்றுக் கொள்ள வழியுண்டல்லவா?

அன்புடன்,

வங்கத்தமிழன்
(ஜெயகாந்த் ராமமூர்த்தி)

Wednesday, July 14, 2004

கற்பு என்ற நிலை

21 ஜூன் 2004 உலகத்தமிழர் மடல் குழுவிற்கு அனுப்பப்பட்ட அஞ்சல்

கற்பு என்ற நிலை

கற்பு என்ற நிலை ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவாக இருக்க வேண்டும் என்றார் பாரதி. மனத்துக்கண் மாசிலாத நிலை தான் கற்பு என வரையறுக்கப் பட்டுள்ளது. வள்ளுவர், "கற்றதனாலாய பயனென்கொல் வாலரிவன், நற்றாள் தொழாஅரெனின்" என்று பாடினார்.

கடவுளை வணங்குவதால் மனம் தூய்மையடைகிறது, தூய மனம் மற்றவருக்கு நல்லதையே செய்ய முற்படும். கல்வி கற்பதன் முக்கியத்துவமே மற்றவர்க்கு நல்லன செய்வது தான். ஆகையால் இறைவனை வணங்காதவன், கல்வி கற்றும் பயனில்லை என்கிறார் வள்ளுவர்.

தூய மனமே கற்பு என்ற விளக்கத்தைக் கொண்டால், அந்த நிலையை பெண்களுக்கு மட்டும் (அதுவும் உடல் சம்பந்தப் படுத்தி) வைப்பது எவ்வளவு அறிவீனம்.

வங்கத்தமிழன்
ஜெயகாந்த் இராமமூர்த்தி.

புன்கணீர் பூசல் தரும்

அன்பிற்கும் உண்டோ அடைக்குந் தாள்
ஆர்வலர்புன் கணீர்பூசல் தரும்
வள்ளுவர்

அன்பு மேலிடும் போது அதை அடைத்து தாளிட்டு வைக்க இயலாது. என்ன தான் அடைத்து வைத்தாலும் அது எப்படியாவது சிறு கண்ணீர் துளிகளாகவாவது வெளியே வந்தே தீரும்.