தினம் ஒரு சிந்தனை தேதி: 15 ஜூலை 2004
இன்றைய சிந்தனை
“இன்கண் உடைத்தவர் பார்வல் பிரிவஞ்சும்
புன்கண் உடைத்தால் புணர்வு”
திருக்குறள்
ஒரு காதலி காதலனுடன் சேர்ந்திருப்பது பற்றி கூறுவதாக அமைந்த பாடல் இது என்றாலும், இதில் சொல்லப்பட்ட கருத்து மனிதனின் துயரங்களுக்கு எது காரணம் என்பதை விளக்குவதாக உள்ளது என்பதால் இந்த குறளை எடுத்துக் கொள்வோம்.
“அவருடன் காதல் கொள்ளத் தொடங்கிய காலத்தில், அவரைக் கண்டாலே மனம் மகிழ்ச்சியால் குதூகலிக்கும், ஆனால் இப்போதோ அவரை ஆறத்தழுவிக் கொள்ளும் போதும், அவரை எப்போதாவது பிரிய நேரிடுமே என்ற அச்சத்தால் மனம் கலங்குகிறது” என்று தலைவி தலைவன் மீது கொண்ட காதல் பற்றிச் சொல்வதாக அமைந்தது.
ஒரு சராசரி மனிதனை இந்த தலைவியின் நிலையில் வைத்து பார்ப்போம். அவனிடம் இன்று கையில் என்ன இருக்கிறதோ அதை கண்டு மகிழ்ச்சி அடைய மறுக்கிறான். இன்னது நடந்துவிடுமோ என்ற பயத்திலேயே காலத்தை ஓட்டிவிடுகிறான். இன்று என் கையில் இரண்டு ரூபாய் இருக்கிறது, ஆனால் நானோ அந்த இரண்டு ரூபாயை எப்படி சரியாக பயன்படுத்தி மகிழ்ச்சியடைவது என்று பாராமல், என்னிடம் பத்து ரூபாய் இருந்தால் நான் மகிழ்ச்சியாக இருப்பேன் என்று எண்ணுகிறேன். அந்த பத்து ரூபாய் கையில் வந்தால் தவிர மகிழ்ச்சியடைய மறுக்கிறேன். நாளை ஒரு வேளை பத்து ரூபாய் கிடைத்து விட்டால் மகிழ்ச்சி வருமா? அப்போது மனம் நூறு ரூபாயை நாடும். (ஆக இதற்கு முடிவே இல்லை). எப்போது மனிதன் நிகழ்காலத்தில் இருப்பதால் மகிழ்ச்சியடைந்து வாழக் கற்றுக் கொள்கிறானோ, அப்போது தான் அவனுக்கு வாழ்க்கை இனிக்கும் என்ற கருத்தை இந்த “பிரிவு ஆற்றாமை” திருக்குறளிலிருந்து நாம் கற்றுக் கொள்ள வழியுண்டல்லவா?
அன்புடன்,
வங்கத்தமிழன்
(ஜெயகாந்த் ராமமூர்த்தி)
Thursday, July 15, 2004
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment