Monday, July 19, 2004

அஞ்சாமை

 
அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும்
எஞ்சாமை வேந்தற் கியல்பு
திருக்குறள்

அஞ்சாத தன்மை, கொடைத்தன்மை (இரக்க சிந்தனை), சிறந்த அறிவு மற்றும் அயரா முயற்சி ஆகிய பண்புகள் அரசர்க்குத் தேவை.

அரசன் என்பவன் நாட்டை ஆள்பவனாகத் தான் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. ஒரு சிறு அலுவலகத்தில் நான்கு நபர்களை வைத்து வேலை வாங்குபவனும், ஒரு குழுவிற்கு தலைமை தாங்குபவனும், சமூக சேவை செய்பவனும் (யாராக இருப்பினும்) அவன் தன் நிலையில் ஒரு பொறுப்பை சுமந்து அதை நிறைவேற்ற வேண்டியுள்ளதால் அரசனுக்கு (தலைவன் என்று பொருள் கொள்க) ஈடானவன்.

அத்தகைய தலைமைப் பொறுப்பில் உள்ள ஒருவன் கொள்ள வெண்டிய பண்புகள் தாம் மேற்காணும் பண்புகள். எடுத்த காரியத்தில் பின் வாங்காத உறுதி, தன்னுடன் இருப்பவர் நலம் பேணும் இரக்க சிந்தனை, திட்டப்படி எடுத்த செயலை செவ்வனே செய்யும் அறிவாற்றல், மற்றும் மேன்மேலும் முன்னேற அயரா முயற்சி, இவை நான்கும் கொண்ட ஒருவன் ஒரு சிறந்த தலைவனாக எப்போதும் திகழலாம். அலுவலகங்களில் பெரும்பாலும் கிடைக்கப் பெறும் மேலதிகாரிகள் தனக்கு கீழே உள்ள தொழிலாளர்களுக்கு கம்சனாகவும், பகாசுரனாகவும், நரகாசுரனாகவும் தெறிவதற்கு முக்கிய காரணமே, அந்த தலைமை பொறுப்பில் உள்ள நபர் மேற்காணும் பண்புகளில் ஏதாவது ஒன்றையோ, அல்லது நான்கையுமேயோ பெறாத நிலையால் தான்.

அன்புடன்,
வங்கத்தமிழன்

No comments: