Wednesday, July 28, 2004

மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி

மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவந்தந்தை
என்னோற்றான் கொல்எனுஞ் சொல்
திருக்குறள்

“உன்னை மகனாக அடைந்ததன் இன்பத்தை நான் இப்போது தான் பெறுகிறேன்”, என்றோ, “உன்னைப் பிள்ளையாகப் பெற்றதற்கு நான் குட்டிச் சுவற்றில் சென்று முட்டிக் கொள்ளலாம்” என்றோ கூற்றுக்கள் தந்தையர்க்கும் அவர் மகவுகளுக்கும் இடையே நடக்கக் கூடியது தான். பெருமை பூரிக்கும் ஒரு தந்தை, தன் மகனைப் போற்றியும், அவன் செயல்களால் அவமானம் அடையும் தந்தை, “ஏன் எனக்கு மகனாகப் பிறந்து இப்படி உயிரை வாங்குகிறாய்” என்றும் சொல்லக் கேட்டிருக்கிறோம்.

சரி, இந்த நிலை சரி தானா? உண்மையிலேயே, மாதா பிதாவின் செயல்களுக்கும் மக்களின் செயல்களுக்கும் தொடர்பில்லையா? ஒரு உதாரணத்திற்குப் பார்ப்போம், தந்தை சிகரெட் பிடிக்கிறார், மகனும் பள்ளிக்கல்வி முடிக்கும் முன்னரே, திருட்டு தம் அடிக்கிறான். விவரமறிந்த தந்தை, “ஏன் சிகரெட் பிடிக்கிறாய்” என்று கேட்க முடியுமா? சரி நான் தான் கெட்டுப் போய்விட்டேன், நீயாவது ஒழுங்காக இருக்கக் கூடாதா? என்ற கேள்விக்கெல்லாம் மதிப்பிருக்காது. உலகில் பல மகான்கள் இருந்தனர், “புத்தர், ஏசு, மகாத்மா” போன்று. அவர்கள் சொன்னதைச் செய்தனர், அதனால் தான் மதிப்பு, இல்லையேல் துரும்பைவிட துச்சமாகத் தானே மதிக்கப் பட்டிருப்பர்.

வள்ளுவர் சொன்ன நிலை, ஒரு “அசாதாரண”, “தலை சிறந்த”, “உன்னத” நிலையை எட்டிய மகன், தன் தந்தைக்கு அத்தகைய பெயரைப் பெற்றுத் தருவான். எல்லா மகன்களும், “உன்னால் முடியும் தம்பியில்” வரும் கமலஹாசன் கதாபாத்திரம் போல தந்தைக்கு பெயர் சேர்க்க வேண்டுமாம், ஆனால் இந்த தந்தைகள் மட்டும் திருந்தவே மாட்டார்களாம். என்னங்க கதை (நான் எல்லா தந்தையர்களையும் சொல்லவில்லை, ஒரு சில பொறுப்பில்லாதவர்களை மட்டும் தான்). பாட்டு “எந்தக் குழந்தையும் நல்லக் குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே, அவர் நல்லவராவதும், தீயவராவதும் அன்னை வளர்ப்பினிலே” என்று தானேங்க சொல்லுது, “தந்தை வளர்ப்பினிலே”னு சொல்லலியே, என்று பொறுப்பற்றுத் திரிந்துவிட்டு, மகன் மட்டும் உதவி செய்யணும். அத்தகைய உதாரணக் குழந்தையைப் பெற இமய மலைக்குப் போய் தவம் (நோன்பு) செய்யச் சொல்லவில்லை வள்ளுவர், உன் வாழ்க்கையையே ஒரு நோன்பாக, யாகமாக வாழ்ந்தால், உன் பிள்ளைகளைப் பார்த்து, நிச்சயம் இந்த சமுதாயம் “இவன் தந்தை என்னோற்றான் கொல்” என்று சொல்லும்.

வங்கத்தமிழன்

No comments: