Tuesday, August 31, 2004

நெஞ்சு பொறுக்குதிலையே

நெஞ்சு பொறுக்குதிலையே - இந்த
நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்
கொஞ்சமோ பிரிவினைகள் - ஒரு
கோடியென் றாலது பெரிதாமோ?
ஐந்துதலை பாம்பென்பான் - அப்பன்
ஆறுதலை யென்றுமகன் சொல்லிவிட்டால்
நெஞ்சு பிரிந்திடுவார் - பின்பு
நெடுநா ளிருவரும் பகைத்திருப்பார்

மகாகவி பாரதி

ஒரு சண்டையென்று வந்துவிட்டால், அப்பன் மகன் உறவுகூட நிற்பதில்லை. கருத்து வேறுபாட்டால், பெற்று, வளர்த்து, சோறு போட்டு, துணிமணி வாங்கித்தந்து, பாராட்டி சீராட்டிய தந்தையையே எதிர்க்கும் தைரியமும் துணிச்சலும் வந்துவிடும்.

தெருவில் ஒரு சண்டை, ஒரு இளைஞன் (18 வயது மதிக்கத்தக்கவன்) ஒரு ஐம்பது வயது நபரை செங்கற்கள் கொண்டு தாக்க முற்பட, தெருவில் இருந்தவர்கள் அவனை மடக்கி கல்லை வாங்கிக் கீழே போட்டுவிட்டு சமாதானம் செய்கிறார்கள். அவர்களை மீறி அவன், விடுங்கய்யா, “இன்னிக்கு, நானா, அந்தாளான்னு பார்த்துடணும்”னு வருகிறான். மற்றொரு புறம், “ஏண்டா தம்பி, உனக்காக நான் எவ்வளவு செலவு பண்ணியிருப்பேன், ஒரு நூறு ரூபாய் தானே கேட்டேன், அதற்கு இவ்வளவு ஆத்திரமா” என்று அந்த பெரியவர் புலம்புகிறார். இது என்ன சார், ஒரு சிறு விஷயத்திற்கு தந்தைக்கும் மகனுக்குமிடையே பிளவா. இப்படிப்பட்ட பிரிவினைகள் வீட்டு நலனையும், நாட்டு நலனையும் எங்கே கொண்டு நிறுத்தும்? உறவுமுறைகளுக்கு மதிப்பும் மரியாதையும் நம் நாட்டில் தான் இன்னமும் இருந்து வருகிறது. மேலை நாட்டவர், நம்மைப் பார்த்துத் திருந்தும் இத்தருவாயில், நாம் “மாமியாரிலிருந்து கழுதை, கழுதையிலிருந்து கட்டெரும்பு” என்று மாற வேண்டுமா?

வங்கத்தமிழன்

Monday, August 30, 2004

பழி மற்றும் புகழ்

செயற்பால தோரும் அறனே ஒருவற்கு
உயற்பால தோரும் பழி
திருக்குறள்

பழிக்கத் தக்கவைகளை செய்யாமல், அறச் செயல்களையே செய்வார்கள் புகழ் வேண்டுபவர்கள். அதாவது எதைச் செய்தால் பழி வரும், எதைச் செய்தால் புகழ் கிடைக்கும் என்பதை அறிந்தவர்கள் தாம் அறவழியில் செல்பவர்கள்.

திருட்டு என்றைக்காவது போற்றப் பட்டிருக்கிறதா? (புராணங்களில் வேண்டுமானால், வெண்ணை திருடிய கண்ணனின் செயல்கள் பழிக்கப் படாமலிருந்திருக்கலாம், ஆனால் அதிலும் அவன் ஒரு சிறு குழந்தை என்பதால், அவன் செய்த குறும்புகளை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்று வேண்டுமானால் சொல்லலாம்). ஒரு ரூபாய் திருடினாலும் திருட்டு தான், ஒரு கோடி ரூபாய் திருடினாலும் திருட்டு தான் என்று தான் நம் பெற்றோர்கள் நமக்குச் சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள்.

அப்படித் திருடுவது தவறு என்று தெரிந்தும், அதைத் தொழிலாகக் கொண்டவன் என்றைக்குமே புகழ் அடைய முடியாது. திருடுபவனை “சாம, தான, பேத, தண்டம்” என்கிற நான்கு முறைகளில் எதையாவதோ, அல்லது எல்லாவற்றையுமோ கையாண்டு நல்வழிப் படுத்தும் காவல்துறையினருக்குத் தானே வருடா வருடம் பதக்கங்களெல்லாம் வழங்கப்பட்டு கௌளரவம் அளிக்கப் படுகிறது. என்றைக்காவது ஒரு திருடனுக்கு மெடல் வழங்கப்பட்டுளதா? (ஆனால், எல்லா துறைகளிலும் சில கழிசடைகள் இருக்கத்தான் செய்கிறது. உடனே, வீட்டிலே மனைவியிருக்க, இன்னொருத்தியை விரட்டி விரட்டி கல்யாணம் செய்தவரையும், அரசாங்கச் சம்பளத்தில் வேறொருவர்க்குக் காரோட்டுபவரையும் தயவு செய்து ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள்).

வேறு ஒரு கோணத்திலும் பாருங்கள், அவன் நாட்டு அதிகாரிகள் சொல்லித்தான் ஒரு வெள்ளையன், குமரனை கீழே தள்ளி மிதித்தான் (நம் நாட்டுக் கொடியையும் சேர்த்து அவமானப் படுத்தப் பார்த்தான்). ஆனால், அப்படிப் பட்ட நிலையிலும் கொடியை கீழே போடாமல் காத்ததனால், இன்று எவ்வளவு உயரத்தில் கொடி காத்த குமரனின் பெயர் நிலை பெற்றுவிட்டது. சரி, நம் நாட்டில் வேண்டாம், அவர்கள் நாட்டிலாவது அந்த வெள்ளைக்கார அதிகாரியின் பெயர் போற்றப் படுகிறதா.

வங்கத்தமிழன்

Saturday, August 28, 2004

மன்னன்

காட்சிக் கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்
மீக்கூறும் மன்னன் நிலம்.
திருக்குறள்

அக்காலத்தில் பெரும்பாலான மன்னர்கள், அரண்மனைகளில் வசித்து, செல்வத்தில் கொழித்து, வறுமைக் கோட்டிற்கு கீழிருந்த மக்களைப் பற்றிக் கவலைப்படாது, போக வாழ்க்கையை மேற்கொண்டிருந்தனர். ஆகையால், பொதுவாக மன்னனையும், அவன் குடும்பத்தாரையும் தம்மில் ஒருவராக மக்கள் பாவித்தது இல்லை. அவர்களை, உயர்ந்த குடி மக்கள் என்று தள்ளி வைத்து விட்டனர். கௌளதம புத்தர் கதையை படித்தவர்கள் இதை எளிதாக உணர முடியும். சித்தார்த்தன் ஒரு இளைஞனாகும் வரை நாட்டு மக்கள் வறுமை, அவர்கள் அனுபவிக்கும் இன்னல்கள் ஆகியவை பற்றி ஒன்றுமே அறிந்திருக்கவில்லை.

அத்தி பூத்தார்போல் யாராவது ஒரு அரசன் மக்களோடு நெருங்கிப்பழகி அவர்கள் சுகதுக்கங்களில் பங்கு கொண்டால், அவனை அந்த நாட்டு மக்கள் போற்றிப் புகழ்வதோடு, தங்களோடு ஒருவனாக ஏற்றும் கொண்டனர். மேற்குறிப்பிட்ட சித்தார்த்தன், வெளியில் வந்து நாட்டு மக்கள் படும் அல்லல்களைக் கண்டு, மனம் வருந்தி, தன் சொந்தங்கள அனைத்தையும் துறந்து காட்சிக்கெளியனாக, எல்லோரிடமும் அன்பு காட்டும் இன்சொலனாகவும் மாற புத்தர் பிறந்தார். பார்க்கத் துறவியாக இருந்தாலும், எல்லோராலும் ஒரு மன்னனைவிட உயர்ந்த நிலையில் வைக்கப்பட்டு தலைவனாக புத்தர் ஏற்றுக் கொள்ளப் பட்டாரல்லவா?

வங்கத்தமிழன்

Thursday, August 26, 2004

ஒரு நல்ல அமைச்சன்

பிரித்தலும் பேணிக் கொளலும் பிரிந்தார்ப்
பொறுத்தலும் வல்ல தமைச்சு
திருக்குறள்

ஒரு நல்ல அமைச்சன், பிரிப்பது, சேர்ப்பது, பொறுத்துக் காப்பது என்று எல்லாவற்றிலும் வல்லவனாக இருத்தல் வேண்டும். நல்லரசு புரிபவன் பொறுத்துக் காக்க வேண்டும் சரி, ஆனால் அது எதற்கு பிரிக்க வேண்டும், பிறகு சேர்க்க வேண்டும்? என்று கேட்கிறீர்களா? அதை இங்கே ஆராய்வோமா?

ஒரு நாட்டிற்கு மிகவும் தேவை என்ன? உள்ளே, அடித்துக் கொள்ளலாம் சேர்ந்துக் கொள்ளலாம். (“டேய், இவன் உள்நாட்டுக் கலவரத்தை ஆதரிக்கிறான் டோ” என்று நினைக்காதீர்கள் - நான் சொன்னது “ஒரு தாயின் வயிற்றில் பிறந்தோர், தம்முள் சண்டை செய்தாலும் சகோதரரன்றோ” என்ற கருத்தில்) ஆனால், வெளிநாட்டுக்காரனோ, நம் நாட்டு எதிரியோ தாக்க விடுவோமா? அப்படித் தாக்க வரும் எதிரியோடு சேர்ந்து நாட்டுக்கு துரோகம் நினைப்பவரை மற்றவரிடமிருந்து பிரிப்பதும், நாட்டிற்கு ஆதரவாயிருப்பவரைப் பேணிக் காத்தலும், ஒரு வேளை, பிரிந்து சென்றோர் மனம் திருந்தி நம்மிடமே வந்தால், அவர்கள் பிழைகளைப் பொறுத்து அவர்களை மன்னித்து ஏற்பதும் தான் ஒரு நல்ல அமைச்சனின் வல்லமை.

இக்காலத்தில் அமைச்சர்களோ, பேணிக் காத்தலை விட்டு விடுகின்றனர். அவர்கள் கொள்கையே, “நம்ம பேச்சைக் கேட்கலையா, அவனை பிரிச்சிடு, அடுத்த தேர்தல்ல திரும்பவும் நமக்குச் சாதகமா பேசறானா, உடனே வெற்றிலைப் பாக்கு வைத்து அழைத்து சேர்த்துக்கோ” என்பது தான். ஐயா வள்ளுவரே, அமைச்சருக்கு தருமம் வரையறுத்து விட்டீர், இவர்களுக்கு என்ன சொல்லியிருக்கிறீர்?

வங்கத்தமிழன்

Wednesday, August 25, 2004

வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம்

வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்
ஐந்தும் அகத்தே நகும்
திருக்குறள்

நல்லவன் போல மற்றவரை ஏமாற்றித் திரியும் மனிதனைப் பார்த்து, அவனுக்குள் இருக்கும் நிலம், நீர், நெருப்பு, ஆகாயம், காற்று என்ற பஞ்சபூதங்கள் தமக்குள்ளேயே சிரித்துக் கொள்ளுமாம்.

எல்லோரையும் ரொம்ப சாமர்த்தியமாக ஏமாற்றிக் கொண்டு வருகிறோம், நம்மை யாரும் எதுவும் செய்ய முடியாது என்று நினைத்துக் கொண்டு மற்றவர்முன் மிக நல்லவன் போல நடித்து போலியாக வேடமிடுபவர்களுக்குத் தெரியாதது என்னவென்றால், ஆண்டவன் அவர்கள் தீய செயல்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறான், அவன் நிச்சயம் அதற்கான தண்டனையைக் கொடுப்பான் என்பது தான். ஒவ்வொரு உயிரும், மேற்குறிப்பிட்ட பஞ்ச பூதங்களாலானதால், அந்த பஞ்சபூதங்கள் இந்த நிதர்சனமான உண்மையை இந்த மனிதன் உணராமல் இப்படி ஏமாற்றித் திரிகிறானே என்று எள்ளி நகையாடுமாம்.

வங்கத்தமிழன்

Tuesday, August 24, 2004

இந்தியா என்றொரு நாடுண்டு

நல்ல பொழுதையெல்லாம் தூங்கி கெடுத்தவர்கள்
நாட்டை கெடுத்ததுடன் தானும் கெட்டார்,
சிலர் அல்லும்பகலும் தெருக் கல்லாயிருந்து விட்டு
அதிட்டமில்லை என்று அலட்டிக் கொண்டார்

ஆமாங்க, இவ்வளவு திறமை, புத்தி கூர்மை எல்லாமிருந்தும் நம்ம ஆட்கள் முன்னேறாததற்குக் காரணம் என்ன? “அது சரியில்ல, இது சரியில்ல, அரசியல்வாதி லஞ்சம் வாங்கறாம்பா, அதான் நாடு குட்டிச்சுவறாப் போகுது என்று திண்ணைப் பேச்சில் கரை கண்ட வெட்டி ஆபீஸர்கள் கதையடித்து நேரத்தை வீணடிக்கறாங்க ஒருபுறம். மற்றொருபுறம் என் படிப்புக்கு வெளி நாட்டுல தான் மதிப்பிருக்கு பாருங்க, நான் எப்படி இங்க உட்கார்ந்து காலத்தை வீணடிக்க முடியும்னு பொறுப்பைத் தட்டிக் கழிச்சுட்டு போறாங்க இன்னொரு சாரார் (வெளி நாடு போங்க, நிறைய படிங்க, கத்துக்குங்க, கத்துக் கொடுங்க, இப்போ காலம் மாறிப் போச்சு. எந்த துறையாயிருந்தாலும் மேல் நாட்டோர்க்கு அப்பன் பாட்டனெல்லாம் நம்ம ஆட்கள் எவ்வளவோ இருக்காங்க. ஆகையால், நாம் கஷ்டப்பட்டு ஆராய்ந்து நேரம், நம் உழைப்பு எல்லாவற்றையும் முதலீடு செய்து தயாரித்தவற்றை நம் நாட்டிற்கு எதாவது ஒருவிதத்தில் உபயோகமாக்குங்க. கடல் கடந்து செல்லும் எல்லோரையும் நாம் சொல்லலை. எவ்வளவோ நாட்டுக்காகவும், மொழிக்காகவும் செய்ய்றவங்க நிறைய பேர் இருக்காங்க).

அடுத்தவரைக் குறை சொல்றத முதல்ல நிறுத்தினாலே நாம முன்னேற வழி பிறந்தா மாதிரி தான்னு வச்சுக்குங்க. “என்ன வளமில்லை இந்த திருநாட்டில், ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்” என்பதை நினைவில் கொள்ளணும். “இந்தியா என்றொரு நாடுண்டு, அது தான் உலகின் அறிவுக் களஞ்சியம்” என்று உலகெங்கும் புகழாரம் சூட்ட வேண்டும் நமக்கு.

வங்கத்தமிழன்

Monday, August 23, 2004

தாய் மொழியில்

தாய் மொழியில் பேசிக் கேட்பதன் சுகமே தனி தான். தமிழகத்திற்கு வெளியே வாழும் நண்பர்களுக்கு இது சற்றே அதிகமாக பாதிக்கும். தாய்நாட்டிலேயே வாழ்பவர்கள் காலை எழுந்தது முதல், இரவு உரங்கப் போகும் நேரம் வரை தாய் மொழியைக் கேட்டுக் கொண்டே இருக்கின்றனர், ஆனால் வேறு மொழி பேசும் மாநிலங்களில் வாழ்வோர், வீட்டை விட்டு வெளியே சென்றால் தாய் மொழி பேச வாய்ப்பே கிடைக்காத போது, எங்காவது நம்மவர் நம் மொழியில் பேசினால் உடனே அவர்களோடு ஐக்கியமாகி விடுவதும் உண்டு.

ஆண்டுக்கு ஒருமுறை இவர்கள் விடுப்பு எடுத்துக் கொண்டு தம் சொந்த மாநிலத்திற்குச் சென்று உற்றார் உறவினருடன் மகிழ்ச்சியாக களித்து வருவது வழக்கம். பொழுது விடிந்து பொழுது போகும் வரை வேறு மொழிகளே கேட்டுப் பழகிப் போன இவர்கள், ரயிலில் பயணச்சீட்டுப் பரிசோதகர் தம் தாய் மொழியில் பேசினாலே மகிழும் போது, சக பயணியர்களுடன் தாய் மொழியில் பேச வாய்ப்பு கிடைத்தால் உச்சி குளிர்ந்து விடுகின்றனர்.

இதைப் பயன்படுத்திப்பல கருங்காலிகள், கொள்ளையடிக்கின்றனர் என்பது ஒரு உண்மை. இத்தகைய சமூக விரோதிகள் முதலில் பயணம் செய்பவரோடு உரையாடத் தொடங்கி பிறகு உணவுப் பண்டங்களை பகிர்ந்து கொள்வது போல் செய்து, அந்த உணவில் மயக்க மருந்துகளை கலந்து, பயணி மயங்கியதும் அவர் உடமைகள் அனைத்தையும் சுருட்டிக் கொண்டு ஓடிவிடுகின்றனராம். ஆமாம், இதில் மிகவும் பாதிக்கப்படுபவர்கள் யாரென்று நினைக்கிறீர்கள்? குளிரிலும் மழையில் எல்லையில் குண்டு மழையில் உயிர் பிழைப்போமா இல்லையா என்று வாழ்ந்து, வருடத்திற்கு ஒரு மாதம் குடும்பத்தோடு மகிழ்ச்சியாக இருக்கலாமென கனவுகளோடு, சம்பாதித்ததில் விதவிதமாய்ப் பொருள்கள் பார்த்துப் பார்த்து வாங்கி எடுத்துக் கொண்டு வீடு திரும்பும் ராணுவ வீரர்களே இதில் அதிகம் ஏமாறுகின்றனராம். ஆகையால், நண்பர்களே ரயிலில் யாராவது தமிழில் பேசினால் நன்றாகப் பேசுங்கள், ஆனால் யாரிடமும் எதையும் வாங்கிச் சாப்பிட்டு விடாதீர்கள். ஐநூறு, ஆயிரம் கிலோமீட்டர் யாரால் நடந்து வீடு திரும்ப முடியும்?

வங்கத்தமிழன்

Saturday, August 21, 2004

அந்தணர்

அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்
திருக்குறள்

எல்லாவுயிர்களிடமும் களங்கமிலா அன்பு காட்டுபவர் அந்தணர் எனப்படுவர். பிறப்பினால் எல்லா உயிர்களும் ஒன்று தான். அப்படிப் பிறக்கும் போது ஏதாவது குறைபாடோடு பிறந்தால், அவர்களிடம் மேலும் அன்பு காட்ட வேண்டியது மிக அவசியம்.

அத்தகைய களங்கமிலா, மாசிலா அன்பை எல்லோரிடமும் பிரதிபலன் ஏதும் எதிர்பாராமல் காட்டி, தான் அறிந்த வித்தைகள் அனைத்தையும் அவர்களுக்கு கற்றுக் கொடுத்து தாய் / தந்தையர்க்கு ஈடாக அவர்கள் மேம்பட எவன் ஒருவன் உழைக்கிறானோ, அவனே அந்தணன் எனக் கூறிக் கொள்ளத் தகுதியுடையவன். அன்பு காட்டுவதில் தாயைவிட சிறந்த ஒரு உதாரணம் காட்ட முடியாது, கல்வியறிவித்தலில் தந்தையைவிட வேறு உதாரணம் இல்லை. ஆகையால், அந்தணத்துவத்தை ஒரு சாதி சார்ந்த சொல்லாகக் கொள்ளாமல், எல்லா உயிர்களுக்கும் தாயும், தந்தையுமாய் அன்பு காட்டி அருள் பாலிக்கும் மனிதர்தாம் அந்தணத்துவம் அடைகின்றனர் என்று கொள்ள வேண்டும்.

வங்கத்தமிழன்

Friday, August 20, 2004

மழை

துப்பார்க்கு துப்பாய துப்பாக்கித் துப்பார்க்கு
துப்பாய தூஉம் மழை
திருக்குறள்

மனிதனுக்கு உண்ண உணவை உருவாக்கப் பயன்படும் மழைத் தண்ணீர், அவனுக்கு தாகம் தீர்க்கும் திரவ உணவாகவும் மாறி தியாகத்திற்கு எடுத்துக்காட்டாக திகழ்கிறது. “அந்த வானத்தைப் போல பறந்த தியாகக் குணம் படைத்தவர்” என்று தனக்கென ஒன்றும் வைத்துக் கொள்ளாமல் மற்றவர்க்காக வாழ்பவரைச் சொல்லுவதுண்டு.

மானம் காக்க ஒரே ஒரு துண்டு மட்டும் கட்டிக் கொண்டு, வேறெதையும் எதிர்பாராமல், இந்த நாட்டிற்குச் சுதந்திரத்தைத் தந்த மகாத்மா போல் எத்தனை பேர் தியாகம் செய்ய முடியும்? தன்னைக் கொல்ல வந்த கோட்சேயைக் கூட “அவனை மன்னித்து விட்டுவிடுங்கள்” என்று சாகும் போதும் கூறி தன்னலமில்லாத மழைக்கு நிகரானார். எல்லாரும் அப்படி மாறிவிட்டால் உலகம் எப்படியிருக்கும்?

வங்கத்தமிழன்

Thursday, August 19, 2004

சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி

சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்
ஏமப் புணையைச் சுடும்.
திருக்குறள்

சினம் என்ற கொடிய நோய்க்கு ஆளானோர் நிச்சயம் கெடுவர். “ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு” என்ற பழமொழி எல்லோரும் அறிந்ததே. அந்த சினம் சேர்ந்தாரை மட்டும் அழிப்பதில்லை, அவருடைய சுற்றம் சூழல் அனைத்தையும் சேர்த்து அழித்துவிடும்.

ஒரு சராசரி கணவன் மனைவியின் எடுத்துக்காட்டை பார்ப்போம். கணவன் ஒரு தனியார் நிறுவனத்தில் நல்ல மேலாண்மைப் பொறுப்பில் உள்ளவன், மனைவியும் ஒரு தனியார் நிறுவனத்தில் முக்கியப் பொறுப்பில் இருப்பவள். அலுவலகத்தில் இருவருக்கும் மாறிவரும் வாடிக்கையாளர் மனப்பாங்கிற்கு ஏற்ப பிரச்சனைகள் மிகவும் அதிகம். அலுவலகத்தில் யாரிடமும் கோபத்தை காட்ட முடியாமல் போக, வீட்டில் ஒருவருக்கொருவர் கடிந்து கொள்வதும், குழந்தையை அடிப்பதுமாக சில காலம் இருந்து, திடீரென ஒரு நாள் விவாகரத்தில் முடிய, இவர்கள் வாழ்க்கை கெட்டதோடு சேர்ந்து அவர்களின் பிஞ்சுக் குழந்தை ஒன்றின் வாழ்க்கையும் கெட்டு கேள்விக்குறியாகி நிற்கிறதல்லவா? ரௌளத்திரம் பழகு என்று பாரதி சொல்லியிருக்கிறார், ஆனால், எப்போதாவது ஒரு முறை மிகவும் கட்டுக்கடங்காது பிரச்சனைகள் போகும் போதுக் கோபப்பட வேண்டும், ஆனால் தொட்டதற்கெல்லாம் கோபப்பட்டால், வாழ்க்கை சூனியமாகிவிடும்.

வங்கத்தமிழன்

Wednesday, August 18, 2004

ஆற்றுவா ராற்றல்

ஆற்றுவா ராற்றல் பசியாற்றல் அப்பசியை
மாற்றுவா ராற்றலிற் பின்.
திருக்குறள்

பசியைப் பொறுத்துக் கொண்டிருக்கும் விரதங்கள் மேற்கொள்வதைவிட சிறந்த நோன்பு, பசியால் வாடும் ஒருவர்க்கு வயிறார உணவளிப்பது. பசிப்பிணி என்னும் பாவியது தீர்ப்பவர், வேறெந்த புண்ணியமும் செய்யத் தேவையில்லை. பல கோடி மக்கள் வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழும் இந்தியா போன்ற நாடுகளில், அனைவருடைய பசியையும் போக்குவது மிகக் கடினம், ஆனால் நமக்குத் தெரிந்து கண்ணெதிரே கஷ்டப்படும் யாராவது ஒருவர்க்கு உதவுவதும் கொடை தான். பசித்தவனுக்கு உணவு வழங்குவதைவிட மேலும் சிறந்த ஒரு செயல் உண்டு, அது “மீன் சோறு போடுவதைவிட, அவனுக்கு மீன் பிடிக்கக் கற்றுக் கொடுப்பது” தான். ஆனால் இக்காலத்தில் பிச்சைக்காரர்கள் மொபைல் போனும், பங்களாக்களும், சங்கங்களும் வைத்திருக்கும் போது, எப்படிக் கொடுப்பது என்று அஞ்சுவது இயல்பு தான். அத்தகைய நிலையில், யாருக்குக் கொடுக்கிறோம் என்று யோசித்துச் செய்வது நல்லது.

சென்ற வாரம் சென்னை சென்ற பொது நடந்த ஒரு சுவையான சம்பவம் இது. என்னுடன் பயணித்தவரிடம் ஒரு பிச்சைக்காரன் ஏதாவது கொடுங்கள் என்று கேட்க (அவன் கையில் ஒரு பெரிய பை, அதில் பிச்சையெடுத்த பொருட்களை சுமக்க முடியாமல் சுமந்து வருகிறான்) அந்த நண்பர், “இல்ல போப்பா” என்று கூற, அவன் பைக்குள் துளாவி ஒரு வாழைப்பழத்தை எடுத்து, “ஒண்ணுமில்லேன்னா, இதைச் சாப்பிட்டுக்கோ” என்றான். இப்படிப்பட்டவர்களுக்கு பிச்சையிட்டால் என்ன பலன்? உங்களிடம் உள்ளதைப் பிறருக்குக் கொடுங்கள், ஆனால் பாத்திரம் அறிந்து பிச்சையிடுங்கள். நீங்கள் பொருளீட்டி அடுத்தவர்க்கு கொடுப்பதைவிட, தேவை என்று வருபவர்க்கு, பொருளீட்டும் வழியைக் காட்டுங்கள், உங்களைப் பல வாய்களும், வயிறுகளும் வாழ்த்தும்.

வங்கத்தமிழன்

Tuesday, August 17, 2004

கல்லா தவரும் நனிநல்லர்

கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன்
சொல்லா திருக்கப் பெறின்.
திருக்குறள்

நிறைகுடம் தளும்பாது, குறைகுடம் தளும்பும். பல வித்தைகளையும் கற்றுத் தேர்ந்தவர்க்கு விளம்பரம் தேவையில்லை. அவர்கள் அவையடக்கத்தோடு பணிவாக இருந்தாலும் பெருமை அவர்களைத் தேடித் தானாக வரும். மாறாக, கல்வியறிவில்லாத மனிதர்கள், நானும் இருக்கிறேன். என்னைப் பாருங்கள், என்னைப் பாருங்கள் என்று கூவிக் கூவி விளம்பரம் செய்தாலும் அவர்களை யாரும் ஒரு பொருட்டாக மதிக்க மாட்டார்கள்.

ஆனால், அப்படி கற்றிராத மனிதன், கற்றவர்முன் ஏதாவது கற்க வேண்டும் என்ற ஆவல் கொண்டு, அவர்களிடமிருந்து வித்தைகளைக் கற்க முற்பட்டால், அவனும் கல்வி கற்று உயர்ந்தவனாகவே கருதப்படுவான். கற்க வேண்டுமென்ற ஆவலிருக்கும் போது, குருவே அவசியமில்லாது, தானே ஒருவன் கற்க வழியுண்டு என்பதற்கு “ஏகலைவன்” ஒரு எடுத்துக்காட்டு. அவன் குருவாகக் கொண்டவரிடமிருந்து ஒன்றுமே கிடைக்கப் பெறாத போதுகூட, அவர்முன் அமைதியாக இருந்து, அவரது ஒவ்வொரு செயலிலும் பாடம் கற்று, அந்த குருவே அடைய முடியாத பெயரைப் பெற்றானே!

வங்கத்தமிழன்

Monday, August 16, 2004

கல்லார்கண் பட்ட திரு

நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதே
கல்லார்கண் பட்ட திரு
திருக்குறள்

ஒரே அறையில் கதவுகளைத் தாளிட்டு, சாளரங்களையும் (ஜன்னல்களை) அடைத்து, ஒரு விளக்குமில்லாது, ஒரு நாள் முழுவதும் இருக்கச் சொன்னால் இருப்பீர்களா? கையை காலை அசைத்து, நான்கு வேலைகள் செய்து, மற்றவர்களோடு உரையாடி, உறவாடி இல்லாமல் சிறை பட்டது போல் யாரால் தான் இருக்க முடியும்? இதே நிலை தான் செல்வத்திற்கும் (பொருளுக்கும்). செல்வம் ஓரிடத்தில் அடைந்திருக்க விரும்பாது. எப்போதும் புழக்கத்தில் இருப்பது தான் செல்வத்தின் இயல்பு. அதை முடக்கி வைப்பதால் தான் இப்போது பணவீக்கம் போன்ற பிரச்சினைகள் வருகின்றன.

சரி, அதற்கும் மேற்குறிப்பிட்ட குறளுக்கும் என்ன சம்மந்தம் என்கிறீரா? இக்குறளில் வள்ளுவர் என்ன சொல்லியிருக்கிறார்? நல்லவர்கள் அனுபவிக்கும் வறுமையைவிட, அறிவிலிகளிடம் உள்ள செல்வம் மிக்க துன்பம் தரும் என்கிறார். நல்லவர் எப்போதும் பிறருக்கு கொடுத்து மகிழ்ச்சியடைவர், ஆகையால் அவர்களுக்கு வறுமை ஏற்பட்டால், பிறருக்குக் கொடுக்க முடியவில்லையே என்ற வருத்தம் அவர்களுக்கு மட்டும் தான் வரும். ஆனால், முட்டாளகளிடம் அடைபட்ட செல்வத்தை செலவு செய்ய வழிவகைகள் தெரியாது, அந்த முட்டாள்கள் துன்பமடைவதோடு, அடைபட்டுக் கிடக்கும் செல்வமும், நல்லவர்க்கு பயனாக நாம் இருக்க வழியில்லையே என துன்பமடையும் என்று கூறுகிறார் போலும் வள்ளுவர்.

வங்கத்தமிழன்

Saturday, August 14, 2004

“எலி வாகனனே - யானை முகனே”

“எலி வாகனனே - யானை முகனே”

ஒரு நாள் ஒரு சுவையான சுவாரஸ்யமான ஒரு வாக்குவாதம் தொடங்கியது. நண்பர் ஒருவர் “பிள்ளையாருக்கு எலி வாகனம் என்று இந்து மதம் கூறுகிறதல்லவா, அது எப்படி சாத்தியம்” என்றார். “பிள்ளையார், உருவத்தில் பெரியவர், எலியோ எவ்வளவு சிறியது, அப்படியிருக்க இது எவ்வாறு சாத்தியம். இது ஒரு பொய்யான உருவகம் தானே” என வினவினார். அருகே இருந்த இன்னொரு நண்பர், “பிள்ளையார் காலத்தில், பெரிய எலிகள் இருந்தன, அவை யானையைச் சுமக்கவல்லவை” என்று பதில் கூற, மற்றொரு நண்பர், “பிள்ளையார் இருந்த காலத்தில் என்றால், அவர் இப்போது இல்லை என்று தானே பொருள்? இல்லாத ஒன்றைப்பற்றி ஏனய்யா வாக்குவாதம்” என்று கூற வாக்குவாதம் முற்றி கைகலப்பில் முடிந்தது.
இவர்களை விடுங்க சார். நாம இதற்கு ஒரு விடை தேடுவோம். சரி, மேற்குறிப்பிட்டது உண்மையா? யானை போன்ற வலிய உருவம் கொண்ட விநாயகர் எலிமீது பயணித்திருப்பாரா? இது சாத்தியமா? என்ற கேள்வியைக் கேட்க, இது ஏன் நமக்கு ஒரு தத்துவத்தை உணர்த்த செய்யப்பட்ட உருவகமாக இருக்கக் கூடாது என்ற எண்ணம் தோன்றும்.
உருவகத்தைத் தாண்டி அதனுள்ளிருக்கும் கருத்தை பார்த்தால், கடவுள் என்பது ஒரு சக்தி என்பதை நாம் உணர்வோம் (நாத்தீகம் பேசும் நல்லவர்களும், நமக்கும் மேல் ஒரு சக்தி உள்ளது என்பதை ஆமோதிக்கின்றனர், ஆனால் அதை கடவுள் என்று கொள்ளாது அறிவியல்வழி அதற்கு விடை காண முற்படுகின்றனர்). “மனிதனென்பவன் தெய்வமாகலாம்” என்றும், “நற்செயல்களால் கடவுள் நிலைக்கு உயர்ந்த மனிதர்களைப் பற்றியும் நாம் அறிவோம். ஆக நல்லன செய்தால் பெருமைப்படுவர் (பெரிய உருவமாகக் கொள்ளலாமா?). தீயன செய்தால் சிறுமைப்படுவர் (மூஷிக அசுரன் என்ற கொடியவனைத் தானே எலியாக உருவகப்படுத்தினர் - ஆகையால் தீயவை சிறியதாகக் காண்பிக்கப் படலாமல்லவா?). இப்போது பாருங்கள் நல்லன எப்போதும் பெரிய வடிவம் எடுத்து, தீமைக்கு எதிராக, பூதாகாரமாக மாறி அவற்றை தன் கட்டுப்பாட்டில் கொண்டுவரும் (வாகனம் ஒருவர்க்கு கட்டுப்பட்ட விஷயம் தானே) என்ற கருத்தைத் தான், பிள்ளையார், எலியின் மீது பயணித்ததாக காட்டி, ஒரு நல்ல கருத்தை நமக்கு உணர்த்த முற்பட்டிருக்கிறார்களோ நம் மூதாதையர்கள்?
வங்கத்தமிழன்

Friday, August 13, 2004

“சிரிப்பு”

“சிரிப்பு” (செயற்கை மற்றும் இயற்கை)

“துன்பம் வரும் வேளையிலே சிரிங்க என்று
சொல்லி வச்சார் வள்ளுவரும் சரிங்க”

என்ற பாடலை நாம் அனைவரும் கேட்டிருக்கிறோம். ஆரோக்கியமாக வாழத்தேவை நல்ல மனசு. நல்ல மனசுக்கு அடித்தளம் கவலையற்ற நிலை அல்லது கவலையை மறந்த நிலை. கவலையை மறக்கச் சிரிக்கணும்னு டாக்டர் சொல்றாங்க. இப்போ நாடெங்கும் சிரிப்பு கிளப் (laughing clubs) அமைக்கப்பட்டு, தினமும் காலையிலே எல்லோரும் ஒன்றுகூடி விதவிதமா சிரித்துவிட்டு கவலையற்ற ஆன்மாக்களாக புதிய நாளைத் தொடங்க, எல்லாம் நல்லபடியா கைகூடி வருதாம்.

அறிவியல் சொல்வது, “ஒவ்வொரு நிகழ்வுக்கும் (cause), ஒரு பலன் (effect) உண்டு”. சித்தாந்தங்கள் சொல்வது, “பலனை உண்டாக்கு, நிகழ்வு தானாக ஏற்படும்”. நாம் கொண்ட சிரிப்பு உதாரணத்தில், மனசு மகிழ்ச்சியாக இருந்தால், சிரிப்பு வரும். இதில் நிகழ்வு மகிழ்ச்சியாக இருத்தல், அதன் பலன் சிரிப்பு வருவது. இங்கே சித்தாந்தமும் அறிவியலும் கை கோர்த்துக் கொண்டு “பலனாகிய சிரிப்பை உண்டாக்கு, மகிழ்ச்சி தானாக வரும்” என்கிறது. சரி, இவ்வளவு கஷ்டப்பட்டு, செயற்கையாக சிரிப்பை வரவழைப்பதைவிட, சிரிப்புத்துணுக்குகள் படித்து, ஹாஸ்ய நாடகங்கள் பார்த்து இயற்கையான சிரிப்பில் மகிழலாமே.
வங்கத்தமிழன்

Thursday, August 05, 2004

ஒரு தடவை சொன்னா, நூறு தடவை சொன்ன மாதிரி

சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை
வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து.
திருக்குறள்

“பாஷா, பாஷாடா, நான் ஒரு தடவை சொன்னா, நூறு தடவை சொன்ன மாதிரி”. இந்த வசனம் தெரியாத தமிழனே இருக்க முடியாது. இதை மேலோட்டமாகக் கேட்டிருக்கிறோமே தவிர, அதன் உள்ளிருக்கும் கருத்து என்ன என்று புரிந்து கொண்டவர்கள் சிலரே. நான் ரஜினி ரசிகன், திரைப்படத்திற்கு விமரிசனம் எழுதுகிறேன் என்று நினைத்து விடாதீர்கள்.

அதாவது, வள்ளுவர் சொன்னது, ஒருவன் சொல்லும் ஒரு சொல்லை ஆராய்ந்து, அதைவிட நல்ல சக்திவாய்ந்த சொல் வேறொன்றுமில்லை என்று அறிந்த பிறகு தான் ஒரு சொல்லைச் சொல்ல வேண்டும் என்கிறார். அதைத்தான் இப்போது, “நாம சொல்றத தான் செய்யறோம், செய்யறத தான் சொல்றோம்” என்றும், “நாம யோசிக்காம பேச மாட்டோம், பேசிட்டு யோசிக்க மாட்டோம்” என்றும் சூப்பர் ஸ்டார் சொல்றாருங்க.

வங்கத்தமிழன்

Wednesday, August 04, 2004

தன்னெஞ்சே தன்னைச் சுடும்

தன்னெஞ்சறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன்னெஞ்சே தன்னைச் சுடும்
திருக்குறள்

தான் சொல்வது பொய்தான் என்று அறிந்தும் ஒருவன் பொய் சொல்லும் காலத்தில், அந்தப் பொய்யை அவன் சொல்லியபின், அவன் நெஞ்சம் அவனை, “பொய் சொன்னாயே, பொய் சொன்னாயே” என்று வாட்டி வதைக்கும்.

ஒரு பெண்ணின் தந்தை, அவளுக்கு மணமுடிக்க எண்ணி மணமகன் தேடப் போக, பிள்ளை வீட்டார், அவரிடம் 20 பவுன் பொன் நகை கொடுத்தால் கல்யாணம் பற்றி பேசலாமென்று கூற, “சரி” என்று தலையாட்டி விட்டு வந்துவிட்டார். இரண்டு பவுனுக்கே வழியில்லாத போது எங்கிருந்து 20 பவுன்? அவர் குறுக்கு வழியில் எண்ணத் தொடங்கி, நல்ல கவரிங் நகையாக வாங்கி, அதைப் பொன் நகை என்று காட்டி கல்யாணமும் முடிந்தபின், அவர் மனம் தினமும் “குட்டு வெளிப்பட்டுவிட்டால் என்ன செய்வது” என்ற பயத்திலேயே பதைபதைத்தது.

ஏன் சார், அவர் மனசாட்சிக்கு எதிராக ஒரு செயலைச் செய்துவிட்டு, அது பொய்யென்று தெரிந்தும் மறைத்ததால் தானே இந்த நிலை? கூனி குருகி நிற்க வேண்டிய கட்டாயம்? இக்காலத்தில் அத்தகைய நிபந்தனைகள் இல்லாது, பெண்ணை ஒரு வியாபாரப் பொருளாகப் பார்க்காது, அவளை ஒரு மனிதப் பிறப்பாக மதித்து, சம அந்தஸ்து கொடுத்து வாழ்க்கை நடத்த, எவ்வளவோ நல்ல இளைஞர்கள் இருக்க, அத்தகைய பொய் எல்லாம் சொல்லாமல், நிபந்தனைகளுக்கு படியாது ராஜா போன்ற ஒரு நல்ல மணமகனாகத் தேடி திருமணம் செய்விக்கலாமே.

வங்கத்தமிழன்

Tuesday, August 03, 2004

மழித்தலும் நீட்டலும்

மழித்தலும் நீட்டலும் வேண்டாம் உலகம்
பழித்த தொழித்து விடின்
திருக்குறள்

மொட்டையடித்துக் கொள்வதோ, ஜடாமுடி வளர்த்துக் கொள்வதோ ஒருவன் இந்த உலகம் பழிக்கும் விஷயங்களை விட்டுவிட்டால் தேவையில்லை.

உலகம் பழிப்பது, சூது/வாது, வஞ்சனை, பொறாமை, அடுத்தவன் குடி கெடுக்கும் மனப்பாங்கு போன்றவை. துறவறம் என்பதை பலர் தவறாக புரிந்து கொண்டிருக்கின்றனர், இல்லையேல் இத்தனைப் போலி சாமியார்கள் எப்படி? “கிக்கு வருதா? கிக்கு வருதா? பிரேமானந்தா” என்ற பாட்டு தான் எப்படி? அன்பே உருவானவர்கள், எல்லோர் மீதும் சமமான அன்பு கொண்டவர்கள், தனக்கென ஒன்றும் வைத்துக் கொள்ளாது, எல்லாவற்றையும் பொதுவென வைப்பவர்கள், தானறிந்த நல்ல விஷயங்கள் எல்லோரும் அறிந்து அதன்மூலம் நன்மையடைய வேண்டும் என்ற மனப்பாங்கு கொண்டவர்கள்தாம், உண்மையில் உலகம் பழித்தது ஒழித்தவர்கள். இவர்கள், தன்னைத்தானே துறவி என்று சொல்லிக் கொண்டு திரிய மாட்டார்கள். இவர்களுக்கு மேற்குறிப்பிட்ட மழித்தல், நீட்டல் போன்ற அடையாளங்கள் தேவையில்லை.

வங்கத்தமிழன்